தீர்மானங்கள்மாநிலக் குழு

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை

Cpim 3

தீர்மானம் – 3

சிறு, குறு தொழில் துறை தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதம், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும், பங்களிப்பு செலுத்துகின்றனர். சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சியில் 15 சதவீதம் என்னும் அளவில் தமிழகம் முன்னணி பங்கு வகிக்கிறது. இதன் மூலம் 32 ஆயிரம் கோடி முதலீட்டில் 8 ஆயிரம் வகையாக பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம், கட்டுமானத்திற்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. சிறு, குறு தொழில்துறை தற்போது ஒன்றிய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார மற்றும் தொழில் கொள்கை காரணமாக கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், உணவு பதப்படுத்துதல், தோல் தொழிற்சாலை, நூற்பாலை, விசைத்தறி, பின்னலாடை, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை, காகித உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், மின்சார உற்பத்தி, மின்னணு மற்றும் மின்சாதன பொருட்கள் உற்பத்தி என பல்வேறு வகைப்பட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன. சற்றே ஏறக்குறைய பல லட்சம் சிறு, குறு தொழில்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 கோடி பேர் வரை வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்கம், அவசரக் கோலத்தில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஜாப் ஒர்க்குக்கு அநீதியாக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. கொரோனா பொது முடக்கம் ஆகியவற்றால் சிறு, குறு நடுத்தர தொழில் துறையும் நிலைகுலைந்து உள்ளது. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கையால், பணவீக்கம் அதிகரித்து, தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் கடுமையான விலை உயர்வு, சிறு, குறு தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் இறக்குமதி கொள்கையாலும், இறக்குமதி வரி அதிகரிப்பாலும் மூலப்பொருட்களின் விலை நிலையற்றதாக ஆகிவிட்டது. ஒன்றிய அரசினுடைய நிதி ஆயோக்கின் தொடர்ச்சியான நிர்ப்பந்ததின் காரணமாக தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

இது தொழில் துறையினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய காரணங்களால் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு குறைந்து போய், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் சிறுதொழிலே முடங்கங்கூடிய நிலைமை இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சிக்காக நேரடி அந்நிய முதலீடுகளை வரவேற்கும் அதேசமயம், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரின் கோரிக்கைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றித் தர வேண்டும்.

1. தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும் நிலைக்கட்டணத்தையும் கைவிட வேண்டும்.

2. ஒன்றிய அரசு தொழில் அபிவிருத்திக்காக கடன் கோருபவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை முற்றாக கைவிடுவதோடு, சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.

3. ஜிஎஸ்டி வரி வசூல் என்ற பெயரில் அந்தத் துறையினர் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரிடம் மேற்கொள்ளும் அபராதம், அதீத வசூல் உள்ளிட்ட அத்துமீறல்களை கைவிட வேண்டும்.

4. ஒன்றிய அரசு சிறு, குறு தொழில் சார்ந்த ஜாப்ஒர்க்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

முன்மொழிபவர் – சி.பத்மநாபன்

வழிமொழிபவர் – மா.கணேசன்

Leave a Reply