கோவை மாவட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சிறந்த தொழிற்சங்க தலைவராகவும் திகழ்ந்த தோழர் எஸ். ஆறுமுகம் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் எஸ். ஆறுமும் துவக்க காலத்தில் ஏ.பி.டி. நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றியவர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டி அச்சங்கத்தின் ஸ்தாபக தலைவராக திறம்பட செயல்பட்டவர். தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக அயராது பணியாற்றி, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுழன்று தொழிலாளர்களை அமைப்பாக திரட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதிர்ந்து பேசாதவர். சிஐடியு மாவட்ட செயலாளர், அகில இந்திய சிஐடியு செயற்குழு உறுப்பினர், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளுக்கு தலைவராக இருந்து அயராது அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர். அவரது மறைவு தொழிலாளி வர்க்கத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.