உலகம் முழுவதும் போராடும் பெண்களுக்கு உந்து சக்தியாக, வீரம் செறிந்த வரலாற்றைத் தாங்கி நிற்கும் பெருமிதத்தோடு அநீதிக்கு எதிராக சமரசமின்றி போராடும் அனைத்துப் போராளிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக மார்ச் 8 சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நவீன தாராளமயக் கொள்கைகள் மூலம் பெண்களின் சுயசார்பை சிதைத்து, மனுவாத சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்து பெண்கள் குறித்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை நாடு முழுவதும் வலுவாக பரப்பி வருகிற ஒன்றிய பாஜக அரசின் இந்துத்துவா கருத்தியலுக்கு எதிராக, கண்ணியத்துடன் கூடிய வாழ்க்கை பெண்களின் உரிமை என்ற லட்சியத்திற்காக இந்திய பெண்கள் அனைவரையும் ஒன்றிணைந்து போராட இந்த மகத்தான சர்வதேச பெண்கள் தினத்தில் சிபிஐ (எம்) அறைகூவி அழைக்கிறது.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் , அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும், அரசாங்கங்களின் பெண்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருவது மிகுந்த நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
பெண்கள் நலத் திட்டங்களுக்கு நிதி குறைப்பு, பெண்கள் அதிகம் பலன் பெரும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி குறைப்பு, சம வேலைக்கு சம கூலி கிடைக்காதது, வேலையின்மை, தொழில் நிறுவனங்களில் நவீன கொத்தடிமைகளாக பெண்களை அமர்த்தி இருப்பது, சாதி ஆணவ கொலைகள், நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் ஆகியவை தொடர்ந்து வருவதும், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதும், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு, சிறுமிகள் காணாமல் போவது குறித்த தகவல்களும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
நீதிமன்றத் தீர்ப்புகளில் வெளிப்படும் ஆணாதிக்க கருத்தியல், வலதுசாரி அரசியல் போக்குகள் சமூக சிந்தனைகளில் ஊடுருவி நிற்பதைக் காட்டுகிறது. பட்டியலின – பழங்குடியின பெண்கள், சிறுபான்மை பெண்கள் மீதான தக்குதல் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் அனைத்து தரப்பினரையும் இணைத்த ஒருங்கிணைந்த போராட்டங்கள் நடத்துவது இன்றைய மிக அவசிய தேவையாக உள்ளது.
குடும்பம், சமூகம், ஊடகம், கல்வி, அரசு நடவடிக்கைள், உணவுப்பாதுகாப்பு, சுகாதாரம் என அனைத்திலும் பெண்களுக்கான உரிமைக்காகவும் பாலின சமத்துவத்துவத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக முன்னெடுப்பதோடு ஜனநாயக அமைப்புகளும், பெண்ணுரிமை இயக்கங்களும் நடத்தும் போரட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
அதோடு கடந்த காலத்தில் பெண்கள் உரிமைக்காகவும், அவற்றிற்கான போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து அத்தகைய போராட்ட மரபை தமிழகத்தில் வலுவாக முன்னெடுப்போம்; சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை தீவிரபடுத்த சர்வதேச பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம்.