மாநில செயற்குழு

உதவித்தொகை உயர்த்தவும், 100 நாள் வேலை வழங்கிடவும் போராடும் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து போலீஸ் அராஜகம் ! சிபிஐ(எம்)கண்டனம்!!

Cpim 1 copy

                நியாயமான கோரிக்கைகளுடன் போராட, சென்னைக்கு புறப்பட்டு வர இருந்த  மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைப்பது, போக்குவரத்தை முடக்கிக் கைது, போராட்டத்திற்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளிகளை வெளியே வரவிடாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தது, அதேபோல் போராட்டத்திற்கு தலைமை ஏற்க சென்ற சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநில தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சிராணி, மாநில பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட தலைவர்களையும் மிக அராஜகமான முறையில் கைது செய்தது போன்ற அடுக்கடுக்கான அடக்குமுறைகளை ஏவியுள்ள தமிழ்நாடு காவல்துறையின்  மேற்கண்ட நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

                தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்குவதுடன், 25 நாட்கள் கூடுதல் வேலை தர வேண்டும்,  வேலை நேரத்தை 4 மணி நேரமாக தீர்மானிக்க வேண்டும், சட்டப்படியான பணித்தள வசதிகள் வேண்டும், 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் அமைந்துள்ள வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

                ஆனால், போராட்ட அறிவிப்பே குற்றம் என்ற வகையில் செயல்பட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை, சங்கத்தின் நிர்வாகிகளை வீட்டுக் காவலில் சிறை வைப்பது, பேருந்து நிலையத்தில் குண்டுக்கட்டாக கைது செய்வது, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்களிடம் அராஜகமாக நடந்துகொள்வது, சிறைப்படுத்தப்பட்டோருக்கு உணவு குடிநீர் வழங்குவதில் தாமதம் செய்வது என்று அவர்களது போராட்டத்தை முடக்க நினைக்கிறது. போராடுவதற்கான அடிப்படை உரிமை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருப்பதாகும். காவல்துறை, எந்த காரணத்தைச் சொல்லியும் அந்த உரிமையை பறிப்பதை அனுமதிக்க முடியாது.

                தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply