மாநில செயற்குழு

கண்ணகி – முருகேசன் சாதி ஆணவப் படுகொலை: வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சிபிஐஎம் வரவேற்பு!

Statement

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தவர் முருகேசன், வேதியியல் பொறியாளர். அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் கண்ணகி, பட்டதாரி. இவர்கள் இருவரும் காதலித்து 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை ஏற்க மறுத்த கண்ணகியின் குடும்பத்தினரும், உறவினர்களுமாகச் சேர்ந்து 08.07.2003 அன்று இருவரையும் கடுமையாகத் தாக்கி, காதில் விஷம் ஊற்றி படுகொலை செய்ததுடன் அவர்களை அவரவர் சாதிக்குரிய சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டனர். இந்தப் படுகொலைகளைத் தடுக்கும்படி முருகேசனின் குடும்பத்தவர் செய்த முறையீட்டை விருத்தாசலம் காவல்துறையினர் உதாசீனம் செய்ததுடன், முருகேசனின் தந்தை, சித்தப்பா ஆகியோரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.  இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் கடும் கண்டங்கள் எழுந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாச்சலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

                ஊடகங்களின் மூலம் செய்தியறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ரத்தினம் இவ்விஷயத்தில் தலையிட்டு தொடர்ச்சியாக நடத்திய சட்டப்போராட்டத்தினால் இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்ட பட்டியல் சாதி, பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து 24.09.2021 அன்று வழங்கிய தீர்ப்பில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனையும் அவரது தந்தை உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. பட்டியல் சாதியினர் மீது பொய் வழக்குத் தொடுத்ததாக தெரிய  வந்தால் அந்தப் பொய் வழக்கைத் தொடுத்த காவல் அதிகாரிக்கு அந்தக் குற்றத்திற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள பிரிவின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக விருத்தாசலத்தில் அப்போதிருந்த காவல் ஆய்வாளரும், காவல் துணை ஆய்வாளரும்  குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

                கடலூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருதுபாண்டியனுக்கு வழங்கிய தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியும், காவல் ஆய்வாளர் தமிழ்மாறனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை இரண்டாண்டுகளாக குறைத்தும் வேறு இருவரை விடுவித்தும் 08.06.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று உச்சநீதிமன்றம் அவர்களது மேல்முறையீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்ததுடன் பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தாருக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

                சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் மனவுறுதியுடன் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ள முருகேசனின் குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகர்கள் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

                முருகேசன் குடும்பத்தாருக்கு  தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பினை வழங்குவதுடன், சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

Leave a Reply