தமிழ்நாட்டில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கும் பழைய மீட்டரை நீக்கிவிட்டு படிப்படியாக டோட்டக்ஸ் (Totex) முறையில் ஸ்மார்ட் மீட்டர் அமைத்து, பராமரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் தனியார் நிறுவனத்திற்கு கொள்ளை லாபத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் நுகர்வோர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் மின்சார வாரியமே தேவையான இடத்தில் மட்டும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மொத்தமுள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கு தனியார் மூலம், ஒன்றிய பிஜேபி அரசு சொல்லும் வகையில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தினால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சுமார் ரூபாய் 50,000 கோடி செலவாகும். இது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தாங்க முடியாத கடன் சுமையை ஏற்படுத்தும். மேலும், 3.40 கோடி மின் இணைப்பில் 87 லட்சம் மின் இணைப்புகள் 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தும் மின் நுகர்வோர்களை கொண்டதாகும். இவர்கள் அனைவரும் இலவச மின்சாரம் பெறுவதால் இதனை மாற்ற வேண்டிய தேவையில்லை. மேலும், 65 லட்சம் மின் நுகர்வோர்கள் 200 யூனிட் மின்சாரம் தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டம் பொருத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், சுமார் 22 லட்சம் விவசாயத்திற்கு பொருத்தப்படும் மின் மீட்டராகும். இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. எனவே, சுமார் 1.74 கோடி மின் இணைப்பிற்கு ஸ்மார்ட் பொருத்த வேண்டிய தேவையே இல்லை. மீதியுள்ள 1.64 கோடி தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும். அதையும் படிப்படியாக மின்சார வாரியமே பொருத்த வேண்டும்.
டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவது, பராமரிப்பது, ரீடிங் எடுப்பது, மின் கட்டணம் வசூல் செய்வது, மீட்டர் பழுது ஏற்பட்டால் சரி செய்வது, பழுதடைந்த மீட்டரை மாற்றி புது மீட்டர் பொருத்துவது இவை அனைத்தும் தனியாரிடம் சென்றுவிடும். வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளது. கைத்தறி, நெசவு ஆகியவற்றிற்கு இதுவரை பெற்றுவருகின்ற மானியமும், விவசாயிகளுக்கும் வழங்கும் இலவச மின்சாரமும் கேள்விக்குறியாகும். மேலும், பீக்அவர் கட்டணம் என்ற முறையில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். படித்த தமிழக இளைஞர்களின் அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிடும். எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டருக்காக உலகளாவிய அளவில் வெளியிட்டுள்ள ஒப்பந்தத்தை (டெண்டர்) ரத்து செய்வதுடன் ஸ்மார்ட் மீட்டரை தமிழ்நாடு மின்சார வாரியமே தேவையான இடங்களில் மட்டும் படிப்படியாக பொருத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.