அரசியல் தமைமைக்குழு

பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்; நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது சரியல்ல!

Pb statement on diplomatic outreach

“நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது துரதிர்ஷ்டவசமானது”, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து, விவாதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துவதற்கு, பிரதமரும் அவரது அரசாங்கமும் மறுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

நாடாளுமன்ற அமர்வினை உடனடியாக நடத்தி, நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவும், ஏதேனும் விளக்கங்கள் இருப்பின் அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும் அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மாறாக, பாஜக – தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மட்டும் கூட்டி, ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து பிரதமர் விளக்கி இருக்கிறார். இது பாரபட்சமானது. குறிப்பாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையில், இதுபோன்ற விளக்கத்திற்காக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் அனைத்து முதலமைச்சர்களின் கூட்டத்தையும் அரசாங்கம் கூட்ட வேண்டும்.

அரசாங்கம் முதலில் இந்திய மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறது. மேலும் அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருந்திட வேண்டும். ஆளும் கட்சித் தலைவர்களும் மாநில அமைச்சர்களும் கூட மத வெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் மேற்கொண்டிடும் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க, அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவரை  அழைத்து, பல்வேறு நாடுகளுக்கு தூதரக ரீதியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனுப்பிவைக்க முடிவு செய்துள்ள பல்வேறு பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து அவருக்குத் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, பஹல்காம் தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தயக்கங்கள் இருந்த போதிலும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்; முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினாலும், பரந்த தேசிய நலனுக்காக, அத்தகைய ஒரு பிரதிநிதிகள் குழுவில் ஒரு பகுதியாக இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமைப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் தலைமைக் குழு

Leave a Reply