இந்திய தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை தொழிலுறவு சட்டத்தொகுப்பு 2020, சம்பளத் தொகுப்பு 2019, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்ட தொகுப்பு 2020 மற்றும் சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 என நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக நாடாளுமன்றத்தில்ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது. இந்த சட்ட தொகுப்புகள் சட்டமாக்கப்பட்டாலும் இந்திய தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக அமலாக்கத்தை ஒத்திவைத்ததுமோடி அரசு. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான குரூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 21.11.2025 முதல் நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.
மோடி அரசின் இத்தகைய செயலானது இந்திய பெரும் முதலாளிகளையும், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்கைக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளதாகும். இனி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தட்டி கேட்க முடியாத வகையில் சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுவார்கள்.
இதன் விளைவாக, தொழிலாளர்களின்உண்மை ஊதியம் மென்மேலும் குறைந்தும், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து, காண்ட்ராக்ட், தினக்கூலி, குறிப்பிட்ட கால வேலை முறையில் அத்துக்கூலிகளின் பெருமளவிலான வேலைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பற்ற தொழிலாளார்கள் கூட்டம் பெருகும் ஆபத்தை உண்டாக்கும். இது இந்திய சமூக, அரசியல், பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து தொழிலமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தும். மோடி அரசின் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் அமலாக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







