வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும், 2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி திருமதி அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக திருமதி அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
– வெ. ராஜசேகரன்
அலுவலக செயலாளர்
12.01.2026
பெறுநர்
தலைமை தேர்தல் அதிகாரி,
தமிழ்நாடு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
அன்புடையீர்! வணக்கம்.
பொருள்: பொங்கல் பண்டிகையையொட்டி – வரைவு வாக்காளர் பட்டியல் – பெயர்கள் சேர்த்தல் – நீக்குதல் – திருத்தம் செய்வதற்கான கால அவகாசத்தை 2026 ஜனவரி 28ந் தேதி வரை நீட்டிக்க கோருதல் தொடர்பாக:
வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே, ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும், 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம். அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடத்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
/ஒப்பம்
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்
எஸ்.ஐ.ஆர் பெயர் நீக்க பட்டியலில் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சிபிஐ (எம்) ஆய்வுக்குழு அளித்துள்ள குறிப்பு
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கிய எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் முதல் பகுதி முடிந்த பின்னர் வாக்குச்சாவடி வாரியாக ‘நீக்கப்பட்டோர் பட்டியல்’ வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை கணிணி தரவு அடிப்படையில் சில ஊடகங்கள் ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டனர். எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சார்பில் ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழு ஏற்படுத்தி, ‘நீக்கப்பட்ட வாக்காளர் தொடர்பான பட்டியலை’ முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் விபரங்களை https://stopsir.cpimtn.org/ என்ற இணையதளத்தில் அனைத்து மக்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும் வெளியிட்டுள்ளோம்.
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட, வாக்குச்சாவடி வாரியான ’நீக்கப்பட்ட பெயர்களின்’ விபரங்கள் அடங்கிய 75,025 பி.டி.எப் கோப்புகள் ஆய்விற்கு எடுக்கப்பட்டன. இதில் (அம்பத்தூர் தொகுதி பாகம் 254, திருவிக நகர் தொகுதி பாகம் 128, ஆம்பூர் தொகுதி பாகம் 180, பென்னாகரம் தொகுதி பாகம் 2, வந்தவாசி தொகுதி பாகம் 60 ஆகியவை இணையத்தில் கிடைக்காத காரணத்தால் அவை விடுபட்டுள்ளன). தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 2127 வாக்குகள் தவிர மீதமுள்ள 97,35, 705 வாக்குகளை நாம் தரவுகளாக ஆய்வு செய்துள்ளோம்.
இந்த ஆய்வின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மக்களுக்கு விளக்கம் தர வேண்டிய சில கேள்விகளை முன்வைக்கிறோம்.
- 2025 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கும், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் மற்றும் நீக்க பட்டியலுக்கும் இடையில் விபரங்கள் ஒத்துப்போகாத நிலைமைக்கு காரணம் என்ன?
இந்த ஆண்டின் தொடக்கத்தில், (2025 ஜனவரி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் மொத்தம் 6,36,12,950 வாக்குகள் இருந்தன. அவற்றை அடித்தளமாக எடுத்துக் கொண்டு புதிய வரைவு பட்டியலின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு முடிவுகளை பரிசீலித்தோம்.
2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு பட்டியலுக்கும், தற்போதைய பட்டியலுக்கும் இடையில் 92,36,194 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ஆனால், தற்போதைய நீக்கப்பட்டியலில் 5,01,638 வாக்குகள் கூடுதலாக உள்ளது.
கூடுதலாகிய வாக்குகளும், மாயமான வாக்குகளும்
எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படி டிசம்பர் 2025 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலும், நீக்கப்பட்ட பெயர் பட்டியலும் கூட்டினால் 2025 ஜனவரி மாதம் பட்டியலில் காணப்பட்ட மொத்த வாக்குகளை காட்டவில்லை. சில தொகுதிகளில் வாக்குகள் கூடுதலாகியுள்ளன. வேறு சிலவற்றில் மாயமாகியுள்ளன.
உதாரணமாக, சோழிங்கநல்லூர் தொகுதி விபரங்களை பார்க்கலாம்.
| 2025 ஜனவரியில் மொத்த ஓட்டு | 2025 டிசம்பரில் செய்யப்பட்ட நீக்கம் (பாகம் வாரியாக நாம் கணக்கிட்ட கூட்டுத்தொகை) | 2025 டிசம்பரில் மொத்த ஓட்டு | வித்தியாசம் |
| 6,90,958 | 2,18,439 | 4,840,11 | 11,492 கூடுதல் |
சோழிங்கநல்லூரில் அதிகமாக உள்ள 11,492 வாக்குகள் 2025 ஜனவரி மாதம் பட்டியலில் இடம்பெறாதவை. இதை வாக்காளர் எண்ணிக்கை ‘கூடுதல்’ எனலாம். இதே போல கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 10,568 வாக்குகளும், ஆவடி தொகுதியில் 10,329 வாக்குகளும், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் 9845 வாக்குகளும், செங்கல்பட்டு தொகுதியில் 9359 வாக்குகளும் கூடுதலாகியுள்ளன.
இவ்வாறான அதிகரிப்பு 205 தொகுதிகளில் நடந்துள்ளது. வாக்காளர் எண்ணிக்கையில் ஜனவரி – நவம்பர் வரையிலான 10 மாத இடைவெளியில் ஏற்பட்டுள்ள கூடுதலுக்கு என்ன காரணம்?
மிச்சமுள்ள 29 தொகுதிகளில் ஓட்டுக்கள் மாயமாகியுள்ளன. உதாரணமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் விபரங்களைப் பார்க்கலாம்.
| 2025 ஜனவரியில் மொத்த ஓட்டு | 2025 டிசம்பரில் செய்யப்பட்ட நீக்கம் (பாகம் வாரியாக நாம் கணக்கிட்ட கூட்டுத்தொகை) | 2025 டிசம்பரில் மொத்த ஓட்டு | வித்தியாசம் |
| 2,50,930 | 56,916 | 1,78,356 | 15,658 குறைவு |
ஆர்.கே நகர் தொகுதியில் 2025 ஜனவரி மாதத்தில் இருந்த மொத்த வாக்குகளில் 56,916 மட்டுமே நீக்கப்பட்டுள்ள நிலையில், 15,658 வாக்குகள் எங்கே போயின? அவை. இந்த வாக்குகள் வரைவு வாக்காளர் பட்டியலிலும் இல்லை, நீக்கத்திலும் இல்லையே. இப்படி வாக்குகள் திடீரென்று மாயமாகியிருப்பது எப்படி?.
இவ்வாறு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் 5556 வாக்குகள் குறைவாக உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் 5489 வாக்குகள் குறைவாக உள்ளன. வில்லிவாக்கத்தில் 4062 குறைவு. தேனி மாவட்டத்தில் பல தொகுதிகளை சேர்த்து 7800 வாக்குகள் இவ்வாறு குறைந்துள்ளன. பெரியகுளத்தில் 2459 குறைவு, கம்பத்தில் 2354 குறைவு, ஆண்டிப்பட்டியில் 1285 குறைவு, போடிநாயக்கனூர் தொகுதியில் 1698 குறைவு.
கூடுதலும், மாயமும் காட்டும் சிக்கல்
மேற்சொன்ன அடிப்படையில் 205 தொகுதிகளில் 5,52,249 வாக்குகள் அதிகரித்துள்ளன. அதே சமயம் (29 தொகுதிகளில்) 52,738 வாக்குகள் மாயமாகியுள்ளன. இவ்வாறு, மொத்தம் 6,04,987 வாக்குகள் பற்றிய விபரங்கள், பழைய கணக்கோடு பொருந்தவில்லை.
எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் முதற்கட்ட பணிகள் அவசர கதியில் நடந்துள்ளன என்பதையும், அந்த நடைமுறைகளை உரசிப்பார்க்கவோ, பிழைகளை சுட்டிக்காட்டி சரி செய்யவோ ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
முகவரியில் இல்லாமல், கண்டறிய முடியாமல் நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்?
முகவரியில் இல்லாதவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்கள் என்ற இரு வகைப்பாட்டில் நீக்கப்பட்டுள்ள பெயர்கள் மிக அதிகமாக இருப்பது ஆபத்தான ஒன்றாகும்.
நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இந்த வகைப்பாடு இரு விதமாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் துறைமுகம் தொகுதி முழுவதும் இரு வகைப்பாடுகள் இல்லை. அண்ணா நகர், பெரம்பூர், தியாகராய நகர், பாளையங்கோட்டை, மைலாப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணராயபுரம், சைதாப்பேட்டை, ரிஷிவந்தியம், கிள்ளியூர் தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குச் சாவடிகளில் ‘கண்டறிய முடியாதவர்களே’ இல்லை. இது ஏன்? குறிப்பிட்ட தொகுதிகளில், ஆகப்பெரும்பான்மையானவர்கள் அவரவர் முகவரியில் வசித்து, எஸ்.ஐ.ஆர் படிவத்தை பெற்றுக் கொண்டார்களா?. அதிகாரிகளின் முடிவுக்கு தக்க ஊருக்கு ஒரு விதமாக பெயர் நீக்கம் நடந்திருப்பதையே இது காட்டுகிறது.
மேலும், இந்த நீக்கங்களை கூடுதலாக ஆய்வு செய்யும்போது மேலும் இரு விதமான பாகுபாடுகள் தெரிகின்றன.
1) திருமணமாகி, வீடு மாற்றலான பெண்களின் வாக்குகளை நீக்குவது அதிகமாக நடந்துள்ளது. (இதற்காக வாக்காளர் பட்டியலில் கணவர் பெயரை உறவினராக சேர்த்துள்ள பெயர்களின் நீக்கத்தை தனியாக ஆய்வு செய்துள்ளோம்)
2) பொதுவாக வேலை, கல்விக்காக இடம் பெயரும் 23 – 40 வயதினரை விடவும், 41-65 வயதினரில் இந்த காரணம் அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே இயல்புக்கு மாறானது.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்களில், ’திருமணம் ஆனவர்கள் நீக்கம் அதிகமாக இருப்பது, அவர்களால் 2003 க்கு முந்தைய எஸ்.ஐ.ஆர் விபரங்களை திரட்ட முடியவில்லை என்பதை காட்டுகிறது. இந்த சிக்கலை அடையாளம் கண்டு, வாக்குரிமை பறிபோவதை தடுத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அவசரகதியான போக்கு பெண்களுக்கு அநீதியை இழைத்துள்ளது.
41-65 வயதில் உள்ள வாக்காளர்களிடம் இடம் பெயர்வு குறைவாகவே நடக்கும். ஆனால், அவர்களே அதிகம் இடம் பெயர்ந்துள்ளதாக நீக்கப்பட்டியல் காட்டுவது இயல்போடு ஒட்டவில்லை. இது வாடகை வீடுகளில் வாழும் எளிய உழைப்பாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
உதாரணமாக, அண்ணா நகர் தொகுதியில் இடம் பெயர்தலால் நீக்கப்பட்டோர் எண்ணிக்கை, அந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 39 சதவீதம் ஆகும். இந்த விகிதம் சென்னையில் உள்ள தொகுதிகள் எல்லாவற்றிலுமே மிக அதிகமாக உள்ளது. சென்னை தவிர பிற தொகுதிகளை பார்த்தால் கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு தொகுதிகளில் 21%, மதுரை தெற்கு 20%, சிங்காநல்லூர் 19.4 % என்ற அளவில் உள்ளது. கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் இருக்கும் தமிழ் நாட்டில், நகரமயமான பகுதிகளில் இவ்வகை நீக்கம் மிக அதிகமாக இருப்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான பாகுபாட்டின் வெளிப்பாடு ஆகும். இதனை தவிர்க்க தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
அதுவும் சென்னையில் பல இடங்களில் அரசே மாற்று இடங்களில் குடியமர்த்திய உழைப்பாளி மக்கள் தங்கள் வாக்குரிமையை இழந்திருப்பதை கள ஆய்வில் உறுதி செய்ய முடிந்தது.
தமிழ்நாட்டின் இறப்பு விகிதம் மற்றும் சராசரி ஆயுள் விபரங்களோடு தேர்தல் ஆணையத்தின் நீக்கப்பட்டியல் விபரங்கள் ஒத்துப்போகாத நிலை எதனால் ஏற்பட்டுள்ளது?
இறப்பு காரணமாக நடந்த நீக்கங்கள் வயதுவாரியாக
| வயது | இறப்பு எண்ணிக்கை |
| 18-22 | 9,484 |
| 23-40 | 1.81 லட்சம் |
| 41-65 | 9.81 லட்சம் |
| 65-75 | 6.85 லட்சம் |
| 75+ | 8.37 லட்சம் |
| மொத்த இறப்பு நீக்கங்கள் | 26,94,177 |
இந்த இறப்பு விபரங்களில் 41-65 வயது வரம்பிலேயே அதிகமான இறப்புகள் காணப்படுகின்றன. அதை விட குறைவான வயதிலும் கூடுதல் இறப்புகள் உள்ளன. இந்த மரணங்கள் ஒரு சில ஆண்டு இடைவெளியில் நடந்திருந்து, தாமதமாக அவர்களுடைய பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட விபரங்கள் இயல்போடு பொருந்தவில்லை. ஆண், பெண் இறப்பு விகிதத்திலும் இந்த வேறுபாட்டை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் சராசரி ஆயுள் 70- 75 வயது என இருக்கும்போது 23 வயதில் இருந்து 65 வயதுக்குள்ளாக மிக அதிகமாக நீக்கங்கள் நடந்திருப்பது எதனால்?
சில ஆண்டுகள் முன் இந்த மரணங்கள் நடந்திருப்பதாக கருதினாலும், அது இன்னும் மிக இளவயது மரணங்களின் எண்ணிக்கையே ஆகும், அதற்கான சாத்தியம் என்ன?
ஒவ்வொரு தொகுதியிலும் எடுத்து பார்க்கும்போது ‘இறப்பு காரணமாக நீக்கம்’ – வயது, சராசரி இறப்பு விகிதம், சராசரி ஆயுள் போன்ற அம்சங்களில் மிகவும் வினோதமான சித்திரத்தை காட்டுகிறது.
தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக இறப்பு காரணமாக நீக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ள தொகுதிகள் பின்வருமாறு:
- காங்கேயம் (26,477)
- தாராபுரம் (24730)
- பல்லடம் (24571)
- பல்லாவரம் (23685)
- சோழிங்கநல்லூர் (22742)
மொத்த வாக்குகளில் இறந்தோர் சதவீதம் என்ற அடிப்படையில் இந்த தொகுதிகள் மேற்கு மண்டலத்திலேயே அதிகமாக உள்ளன.
- காங்கேயம் (9.88 %)
- தாராபுரம் (9%)
- மடத்துக்குளம் (7.08%)
- அவினாசி (7.07)
- திண்டுக்கல் (6.94)
தமிழ்நாட்டின் பின் தங்கிய பகுதிகள், வறட்சியான பகுதிகள் இப்பட்டியலில் வரவில்லை. எனவே, இறப்பு காரணமான நீக்க விபரங்கள் இருமுறை ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறே, பெண்களின் இறப்போடு, ஆண்களின் இறப்பு விகிதம் 17-20 சதவீதம் கூடுதலாக இருப்பது இயல்பு என கொண்டால், பல தொகுதிகளில் இந்த விகிதம் இயல்புக்கு மாறாக தென்படுகிறது.
- திருப்பூர் (வடக்கு) (67)
- சோழிங்கநல்லூர் (65)
- பல்லடம் (64)
- திருப்பூர் (தெற்கு) (64)
- மதுரவாயல் (62)
திருத்துறைப்பூண்டி, காட்டுமன்னார் கோயில், எடப்பாடி, கலசப்பாக்கம், பாலக்கோடு, செஞ்சி போல சில தொகுதிகள் தவிர மற்றவை மிக அசாத்தியமாக உள்ளன.
1)ஸ்ரீவைகுண்டம் (8)
2) போளூர் (15)
ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இறப்பு விகிதம் தமிழ்நாட்டின் சராசரிக்கும் குறைவாக உள்ளது. இது எப்படி?
ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நிலை?
எங்களுடைய ஆய்வில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நிலைமைகளை தனித்தனியாக ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளோம். ஆனால் இந்த ஆய்வினை துல்லியமாக்கிட வாக்குச் சாவடி வாரியாக மொத்த வாக்குகளை எஸ்.ஐ.ஆர் ஆய்வுக்கு முன் மற்றும் பின் என தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், புதிதாக இணைக்கப்படும் வாக்காளர் விபரங்களை, இதே போல கணிணி ஆய்வு தரவு பரிசோதனைக்கு ஏற்ற முறையில் வழங்க வேண்டும். அவற்றை பரிசோதிக்க உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
முடிவாக
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர் – நியாயப்படுத்தவே முடியாத பிழைகளோடு நடப்பதை எங்கள் ஆய்வுத் தரவுகள் ஆதாரப்பூர்வமாக காட்டுகின்றன. இவற்றை விவாதித்து சரி செய்யவும், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உரிய அவகாசமும் தரப்படவில்லை. அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.
இன்னும் சில நாட்களில், பல கோடி வாக்குகளை மொத்தமாக நீக்கவும், சேர்க்கவும், பரிசீலிக்கவும் செய்யவுள்ளது தேர்தல் ஆணையம். இவ்வளவு குறுகிய காலத்தில், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் நியாயத் தன்மையை பரிசோதிக்கும் வல்லமை எந்தவொரு தனிப்பட்ட அமைப்பிற்கும் இல்லை.
எனவே, எஸ்.ஐ.ஆர் நடைமுறையே எளிய வாக்காளர்களுக்கு எதிராக அமைவதை உணர்ந்து அவசர கதியான அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) கோருகிறது.
சென்னை – 17.
12.01.2026
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்: பகுப்பாய்வு பற்றிய குறிப்பேடு
2025 டிசம்பர் முதற்கட்ட SIR பட்டியல்களில் நீக்கப்பட்ட பெயர்களை ஆய்வுசெய்துள்ளோம். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வாக்குச் சாவடி (station) வாரியாக நமது ஆய்வுன் முடிவுகளைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்:
இந்த இணையதளத்திலுள்ள பல்வேறு தகவல்களையும், வரைபடங்களையும், பகுப்பாய்வுகளையும் படிப்பதற்கான வழிகாட்டுதல் குறிப்பு பின்வருமாறு:
- தொடக்கத்தில் 234 தொகுதிகளும் வரிசைப்படி இடம்பெற்றுள்ளன. அவற்றின் வண்ணம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதத்தின் அடிப்படையில் மாறுபடும்.
- ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனிப்பட்ட பிரச்சினைகளை அறிய, அந்தத் தொகுதியை மட்டும் சொடுக்கினால், அத்தொகுதி பற்றிய விவரங்களைத் தனி இணையப் பக்கத்தில் காணலாம். தொகுதி விவரங்களைப் புரிந்துகொள்ள அடுத்ததாக வரும் ”தொகுதி வாரியான பக்கங்களைப் புரிந்துகொள்ள கவனிக்க வேண்டியவை” என்கிற பட்டியலைப் படிக்கவும்.
- அதற்கு முன்பாக முகப்புப் பக்கத்தில் பிற அம்சங்களைப் பார்த்துவிடலாம்:
- Total deletion – 234 தொகுதிகள் ஒவ்வொன்றிலும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களில் நீக்கப்பட்டோரின் சதவீதம்–ஆகிய இரண்டு விவரங்களும் இந்த வரைபடத்தில் உள்ளன
- Net deviation – SIR நடைமுறைக்குப் பின்னர் சில தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது (ஏறத்தாழ 5.52 லட்ச வாக்குகள் அதிகரித்துள்ளன). அதேசமயம் 29 தொகுதிகளில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் மாயமாகி உள்ளன. இந்த விவரம் வரைபடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
- அடுத்தடுத்த பகுதிகளில் மாநிலம் முழுவதும் நீக்கப்பட்டோரின் பாலினம், வயது, இறப்பு விகிதம், காரண அடிப்படைகள்–என பலவிதங்களிலும் வரைபடங்களைத் தொகுத்துள்ளோம்.
- கடைசியாக, data details என்கிற பகுதி உள்ளது. இதில் நம் ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக ஒரே அட்டவணையில் இடம்பெற்றுள்ளன
பட்டியல்: தொகுதி வாரியான பக்கங்களைப் புரிந்துகொள்ள கவனிக்க வேண்டியவவை
- சட்டமன்றத் தொகுதியின் எண்ணும் பெயரும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன
- Executive summary – தொகுதி பற்றிய பொதுப்பட்ட விவரங்களும், நாம் ஆய்வுக்கு உட்படுத்திய பாகங்களின் (parts affected) எண்ணிக்கையும், அதிலுள்ள வாக்குகளும் (total deleted records), தொகுதியில் கூடுதலாகியுள்ள, அல்லது மாயமாகியுள்ள வாக்குகள் (எதிர்மறைக் குறி (-) கொண்டவை) உள்ளிட்ட அடிப்படையான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்
- Deletion reasons – இந்தப் பகுதியில் SIR நடவடிக்கையால் பெயர்நீக்கம் செய்யப்பட்டதன் காரண அடிப்படையினை ஒரு வரைபடமாகச் சித்தரிக்கிறது. இதில் குறிப்பாக, shifted (நிரந்தரமாகக் குடிபெயர்ந்தவர்கள்), missing (இருப்பிடத்தில் வசிக்காதவர்கள்) ஆகிய இரண்டு வகைப்பாடுகளையும் இணைத்துப் பார்ப்பது இந்த SIR நடைமுறையால் ஏற்பட்ட பிரச்சினையைச் சரியான கோணத்தில் அணுக உதவும்
- Gender demographics – வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்நீக்கம் செய்யப்பட்டவர்களின் பாலின அடிப்படையிலான பகுப்பாய்வினை வரைபடமாகக் காட்டுகிறது.
- Gender reason analysis – ஆண் வாக்காளர்களும் பெண் வாக்காளர்களும் சம அளவுகளில் நீக்கப்பட்டதாக இப்பகுதியில் தென்பட்டாலும் கூட, இருபாலினத்தவரின் நீக்கத்திலும் காரணங்கள் அடிப்படையில் உள்ள மாறுபாடுகளை இந்தப் பகுப்பாய்வில் காண முடியும். பொதுவாக இறப்புவிகிதம் ஆண்களிடையே அதிகமாகவும், இடம்பெயர்வதால் நீக்கம் (shifted & missing) பெண்களிடையே அதிகமாகவும் இருப்பது, பாலினப் பாகுபட்ட அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது
- Female deletion relationship analysis – திருமணமான பெண்களுக்கு வாக்குப்பட்டியலில் கணவர் பெயர் இடம்பெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் ஆய்வு செய்யும் போது, SIR நடைமுறை திருமணம் காரணமான இடம்பெயரும் பெண்களுக்கு எதிரானதாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
- Age and gender distribution – எந்த வயது வரம்பில் நீக்கம் அதிகமாக நடக்கிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இடைவெளி என்ன? முதலிய பகுப்பாய்வுகளை இந்தப் பகுதி காட்டும்.
- 18 வயது முதல் 40 வயது வரை வாக்காளர்கள் முதல்கட்ட SIR நடைமுறையில் கேட்கப்பட்ட விவரங்களைக் கொடுப்பதில் சிரமம் இருக்க வாய்ப்புண்டு
- 41 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் 2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சாத்தியம் கொண்டவர்கள், ஆவணங்களைத் தரும் வாய்ப்புகள் கூடுதலாக இருப்பவர்களாக விளங்குகின்றனர்
- தமிழ்நாட்டின் சராசரி ஆயுளான 70-75 வயது என்கிற வரம்புடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக 65-75, 75+ ஆகிய இரண்டு வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டுள்ளோம். இதற்குக் கீழ் பல பகுதிகளும் வயது வரம்பு, பாலினம், உறவுமுறை ஆகிய பல்வேறு கணக்கீடுகளை வரைபடங்களாகக் காட்டுகின்றன
- வாக்குச் சாவடி அடிப்படையிலான தர வரிசைகள்: பல வகைப்பாடுகளில் ஒரு தொகுதியின் முதல் இருபது வாக்குச்சாவடிகள் பெயருடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
- High deletion polling station (குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் மிக அதிகமான நீக்கம் நடந்துள்ள 20 வாக்குச் சாவடிகள்)
- Shifted, missing ஆகிய இரண்டு காரணங்களை மட்டும் கூட்டி அதன் அடிப்படையில் 20 வாக்குச்சாவடிகளின் தரவரிசை
- மேற்கண்ட இரண்டு எடுத்துக்காட்டுகளைப் போல, நாம் ஆய்வுக்கு உட்படுத்திய பல்வேறு காரணங்களின் அடிப்படையிலும் முதல் 20 வாக்குச்சாவடிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விபரங்களைக் கொண்டு அவரவர் வாழும் சட்டமன்ற தொகுதி, வாக்குச் சாவடிகளில் ஏதேனும் குழப்பங்கள் தென்படுகின்றனவா என்பதை அறிந்து, உள்ளூர் அளவில் தலையீட்டை வடிவமைக்க முடியும்.
குறிப்பு: station (வாக்குச்சாவடி) அடிப்படையில் மொத்த வாக்காளர்களின் விவரத்தைத் தேர்தல் ஆணையம் கணினி பகுப்பாய்வுக்கு உகந்த வடிவத்தில் வழங்குவதில்லை. தேவைப்படும் பாகங்களில், மொத்த வாக்காளர் விபரம் 2025 ஜனவரி அளவில் எண்ணவென்பது தெரிந்தால் நமது ஆய்வை அதற்கேற்ப செய்து வழங்க முடியும்.
அல்லது நமக்கு தேவைப்படும் வாக்குச் சாவடிகளின் எண்ணைக் குறிப்பிட்டால், அந்த வாக்குச் சாவடியில் மட்டும் நம்முடைய ஆய்வினை மேற்கொண்டு முடிவுகளை வழங்க முடியும்.







