சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சுமைகள்: மோடி அரசை எதிர்த்துப் போராடத் தயாராவீர்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு. மே 10-11, 2026 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் கூடியது. இக்கூட்டம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிரதமரின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைக்குக் கண்டனம்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரின் காரணமாக மக்கள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் விடுத்திருக்கும் அழைப்பு மிகவும் முரண்பாடான ஒன்றாகும். ஈரானின் (பிரிக்ஸ் அமைப்பின் சக உறுப்பினர்) மீதான தாக்குதல்களுக்கும் தற்போதைய நிலைமைக்கும் காரணமான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுடன் முழுமை யாகத் தன்னை இணைத்துக்கொள்ள எடுத்த முடிவின் காரணமாக, மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறிய அரசு, தற்போதைய குழப்பமான சூழலுக்கு அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியே காரணம் என்று குற்றம் சாட்டவும் மறுத்துவிட்டது. மக்கள் தங்கள் நுகர்வைக் குறைத்துக்கொண்டு சிக்கனமான வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக, அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்கு வரத்தை அனுமதிக்கவும் அழுத்தம் கொடுக்கும் முயற்சி யில் ‘உலகத் தெற்கு’ நாடுகளுடன் இந்திய அரசு கைகோர்த்திருக்க வேண்டும். அரசுக்குச் சற்றுத் தொலை நோக்குப் பார்வையும், தனது எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தும் நீண்டகால திட்டமிடலும் இருந்திருந்தால், நாம் இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கியிருக்க மாட்டோம்.
விவசாயப் பருவம் மிக விரைவில் தொடங்க வுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு உரங்கள் முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கச் செய்யப்படா விட்டால், நமது உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். இது நமது மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீதும் பலவீனப் படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும். உரங்களை உடனடி யாகக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் கடமையாகும்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கூறிவந்த கூற்றுகளைப் பிரதமரின் உரையே அம்பலப் படுத்துகிறது. பொருளாதாரத்தில் அனைத்தும் சரியாக இல்லை என்பதை அவரது அழைப்பு நிரூபிக்கிறது. பிரதம ரின் இந்த கருத்துகள் வெளியிடப்பட்ட காலமும் கவனிக்கத்தக்கது – தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன. உண்மைகளுக்குப் புறம்பான தகவல்களின் அடிப்ப டையில் தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்குடன், பொரு ளாதார எதார்த்த நிலையை மக்களிடமிருந்து மறைப்ப தற்காகவே இது திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் அரசாங்கம் சுமத்தவிருக்கும் சுமைகளை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான அறிவிப்பு
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, 2026 ஏப்ரல் 1 முதலே தொழிலாளர் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த விரும்பியது. ஆனால், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை விதிகளை அறிவிக்கக் காத்திருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நான்கே நாட்களில், அவர்கள் இப்போது தொழிலாளர் சட்ட விதிகளை நடைமுறைப் படுத்தியுள்ளனர். இது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் வஞ்சகமான செயல்பாட்டு முறையை அம்பலப் படுத்துகிறது. மாநிலங்களில் உள்ள பாஜக அரசாங்கங் கள் தொழிலாளர் சட்ட விதிகளை அமல்படுத்த ஆர்வமாக உள்ளன; மாநில வரைவு விதிகளையும் தயாரித்துள்ளன. குறைந்தபட்ச ஊதியம், சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் நீண்ட வேலை நேரத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய மாபெரும் போராட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, விதிகளை அறிவிக்க முன்வந்திருப்பது பாஜகவின் தொழிலாளர் விரோதத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
அறிவிக்கப்பட்ட மத்திய விதிகளின்படி தொழிலாளர் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்குள்ள சட்டமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, தொழிலாளர் சட்ட விதிகளைத் திருத்தி, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மாநில அரசுகளை சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்காகப் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த விதிகளை அமல்படுத்துவதை எதிர்ப்பதில் தொழிலாளர்களுக்குத் தனது ஆதரவை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துவதோடு, அவர்களுடன் துணை நிற்கும் என்றும் தெரிவிக்கிறது.
தொகுதி மறுவரையறை
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் தனது செயல்திட்டத்தை முன்னெடுக்க முயன்றது. அது மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து ஆதரவைத் திரட்ட முயன்றது. இந்த முன்மொழிவுக்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேவைப்பட்டதாலும், அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டதாலும், எதிர்க்கட்சிகள் கூட்டாக பாஜகவின் திட்டங்களைத் தோற்கடித்தன. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பெண்களுக்கு எதிரான வர்களாகச் சித்தரிக்க பாஜக முயன்றது, ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை எதிர்க்கட்சி களால் பாஜகவின் முயற்சிகளைப் பின்னுக்குத் தள்ள முடிந்தாலும், தொகுதி மறுவரையறையின் ஆபத்து நீடிக்கிறது. இந்த முழு நடவடிக்கையும் முன்மொழி யப்பட்டுள்ள விதம் பாஜகவுக்குத் தேர்தல் ரீதியாகப் பயனளிக்கும் நோக்கம் கொண்டது. பாஜகவின் செல்வாக்கு குறைவாக உள்ள தென்னிந்திய மாநி லங்களின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கமும் இதற்கு உண்டு. தனது செயல்திட்டத்தைச் செயல்படுத்த பாஜக இப்போது அரசு நிறுவனங்களைத் திறம்படப் பயன்படுத்துகிறது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
அடுத்த கட்டத் தேர்தலிலிருந்தே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை சிபிஐ(எம்) மீண்டும் வலியுறுத்து கிறது. இந்த மசோதாவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.
எஸ்ஐஆர் (SIR) –இன் தாக்கம்
பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடைமுறை, சமீபத்தில் முடிவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ (logical discrepancies) என்ற புதிய வகையை அறிமுகப் படுத்தியது. வாக்காளர்கள் முறையிட்டு, தகுந்த ஆவணச் சான்றுகளைச் சமர்ப்பித்த பின்னரும் கூட, இந்த வகையைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலி லிருந்து சுமார் 27 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீக்கங்கள் தேர்தல் முடிவுகளில் ஏற்படுத்திய தாக்கத்தை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நலன்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் பட்டி யல்கள் இவ்வாறு சிதைக்கப்பட்டதில்லை. இந்த முழு நடவடிக்கையும் நமது தேர்தல் முறையின் நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.
அரசு நிறுவனங்களின் ஏறக்குறைய அனைத்து மட்டங்களிலும் ஊடுருவியுள்ள தங்கள் தொண்டர்களைப் பயன்படுத்தி, ஆர்எஸ்எஸ்-பாஜக தனது நோக்கங்களை அடைய முயல்கிறது. மேற்கு வங்கத்தில் புதிதாகப் பதவியேற்ற பாஜக முதலமைச்சரின் ஆலோசகர் பதவிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப் பட்டிருப்பது அத்தகைய ஊடுருவலுக்கு ஒரு சான்றாகும். இந்த நடைமுறையை விமர்சித்த பல்வேறு கட்சிகளுக்குச் செவிசாய்க்காமல், எஸ்ஐஆர் நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுத்ததில் தேர்தல் ஆணையத்தின் பங்கு இதற்கு ஒரு தெளிவான உதாரணமாகும். இந்த மிக முக்கியமான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
தொழிலாளர்கள் போராட்டங்கள் கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் தீவிரமான மற்றும் தன்னெழுச்சியான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டங் கள் முதன்மையாகத் தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் (NCR) சுற்றியே அமைந்திருந்தன, இருப்பினும் அவை மற்ற மாநிலங்களிலும் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் பெரும் பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழி லாளர்கள் ஆவர். அவர்களில் பலர் இளைஞர்கள்; சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்தவும், திரட்டவும் சமூக ஊடகங்கள் போன்ற நவீன தகவல் தொடர்பு வழி களைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலான இடங்களில், தங்களை வழிநடத்த எந்தவொரு தொழிற்சங்கமும் இன்றி அவர்கள் தன்னெழுச்சியாகப் போராடினர்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு இந்தப் போராட்டங்களை அடக்க முயன்று காவல்துறையினரைக் களமிறக்கியது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் பலர் இன்னும் சிறையில் உள்ளனர். இருப்பினும், போராட்டங்களின் தீவிரமும், நாடு முழுவதும் அவை பெற்ற கவனமும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியது, இருப்பினும் அந்த உயர்வு மிக அற்பமானதே.
சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்கு களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும், அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்; மேலும், இந்தப் பிரச்சனையைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதாமல் ஒரு தொழிலாளர் தகராறாகக் கருத வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
கியூபாவிற்கான அச்சுறுத்தல்கள்
அமெரிக்கா மீண்டும் ஒருமுறை கியூபாவை ‘கைப்பற்றும்’ என்று அறிவித்து, தடைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. அது கியூபா மீது இராணுவப் படையெடுப்பு நடத்துவதாக அச்சுறுத்துகிறது. மே 1 அன்று, கியூப நிறுவனங்களுடன் செயல்படும் அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எதிராகக் கட்டாய இரண்டாம் நிலைத் தடைகளை விதிக்கும் உத்தரவை அது பிறப்பித்தது. இந்த உத்தரவு, இறையாண்மை கொண்ட மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு எதிரான நேரடி நிர்ப்பந்தத்தின் ஒரு கருவியாகும்; மேலும் இது, உலகளாவிய நிதி அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கியூபாவிற்குத் தனது வலுவான ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதோடு, அமெரிக்க அச்சுறுத்தல்களைக் கண்டிப்பதில் இணையு மாறு நம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது; மேலும் பொருளாதாரத் தடையை உடனடியாக நீக்கக் கோருகிறது.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பை இந்திய அரசு திட்டவட்டமாகக் கண்டிக்கத் தவறிவிட்டது. பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற முறையில், இந்தத் தவறு இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது; ‘உலகத் தெற்கு’ நாடுகளிடையே இந்தியா தனது செல்வாக்கை இழந்து வருகிறது. கியூபா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதிலும், கியூபாவுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க இந்திய அரசு தயாராக இல்லை. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் அடிமைத்தன மான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டிற்கு இது மற்றொரு சான்றாகும்.
மத்தியக் குழுக் கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் 2026 மே 22-24 தேதிகளில் தில்லியில் கூடி, சட்டமன்றத் தேர்தல் மறுஆய்வு மற்றும் வேகமாக மாறிவரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆழமாக விவாதிக்கும். தமிழில் : ச.வீரமணி







