அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல் – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு!

11

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல்.

ஆட்சியாளர்களுடன்மிகத் தீவிரமான சமரசம்!

வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிரத் திருத்தத்தை’ உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நீதியின் கேலிக்கூத்தாகும்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களின் வாக்குரிமையைப் பெருமளவில் பறிப்ப தற்கும், அவர்களைப் புறக்கணிப்பதற்கும், அச்சுறுத்துவதற்கும் வழிவகுத்த ஒரு செயல்முறைக்கு அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம், ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசிய லமைப்பு உத்தரவாதங்களின் பாதுகாவல ராகத் தான் ஆற்றவேண்டிய கடமையைச் செய்திடாமல் உச்சநீதிமன்றம் ஆட்சியா ளர்களுடன் மிகத் தீவிரமாக சமரசம் செய்து கொண்டுள்ளது.

வயது வந்தோர் வாக்குரிமை’ கோட்பாட்டிற்கு எதிரானது!

மக்களாட்சியில் மக்கள் பங்கேற்பதற் கான மிக அடிப்படையான கருவியாகத் திக ழும் வாக்களிக்கும் உரிமையை, தன்னிச்சை யான அதிகாரத்துவச் சந்தேகங்களுக்கும், பெருமளவிலான ஆவணச் சோதனை களுக்கும் உட்படுத்த முடியுமா எனும் ஓர் அடிப்படை வினாவிற்கான விடையையே மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

கோரப்பட்ட ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், ஏழைகள், புலம்பெயர்ந் தோர், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற ஏழை மக்கள், பிற விளிம்புநிலைச் சமூகத்தினர் ஆகியோர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படு வதற்கு ‘சிறப்பு தீவிர திருத்த’ நடைமுறை வழிவகுத்ததால், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ‘உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை’ எனும் கோட்பாட்டையே அரித்து வீழ்த்தியுள்ளது.

சிக்கல்களை கவனிக்கத்தவறியது வேதனையானது!

வாக்காளர் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்த’ செயல்முறை முழுவதிலும் வெளிப் படைத்தன்மை அறவே இல்லை. முறையான முன்னறிவிப்பின்றிச் சட்டப்பூர்வ வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது குறித்தும், சுமை மிகுந்த சரிபார்ப்பு நடை முறைகள் குறித்தும், விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் பெரும் தடைகள் குறித்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த அறிக்கைகளை நீதிமன்றம் கவனிக்கத் தவறியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

மேற்கு வங்கத்தில், சோதிக்கப்படாத மென்பொருளின் அடிப்படையில் ‘தர்க்க ரீதியான முரண்பாடு’ எனும் வெறுக்கத்தக்க கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ‘சந்தேகத்திற்குரிய’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டனர். இறுதியில், உச்சநீதிமன்றத்தால் சட்டரீதியான நிவாரணம் அளிக்கப்பட்ட 27 லட்சம் பேர் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர்.

அரசியலமைப்புச்சட்ட உறுதிமொழிகள் தகர்ப்பு!

துரதிர்ஷ்டவசமாக, மக்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகி யவை வழங்கப்பட்டிருந்தாலும், பிற அடையாள ஆவணங்கள் வாயிலாக அவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வந்திருந்தாலும் கூட, குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமைகள் என்பவை தற்போது தேர்தல் ஆணையம் கூறும் ‘ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணங்களை’ வைத்திருப்பதைப் பொறுத்தே அமையும் எனும் ஒரு நடைமுறையை நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது, துரதிர்ஷ்டமாகும். இது சமத்துவம் குறித்த அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உறுதிமொழிகளின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலாகும்.

உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குடியுரிமை நிர்ணயம், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று திட்ட வட்டமாகக் கூறப்பட்ட போதிலும், வாக்கா ளர் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த பரவலான ஆதரவு, அந்த கூற்றையே முறியடிக்கிறது.

என்ஆர்சி-யை மறைமுகமாக அறிமுகப்படுத்த வழியமைப்பதா? வாக்காளர் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்த’ செயல்முறை மூலம் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும், அவர்களின் குடியுரிமையை சரிபார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கு மாறு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, அவர்கள் அனைவரையும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கக் கட்டாயப்படுத்துகிறது.

இது ஒரு வகையில், நாடு முழுவதும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த தேசிய குடி மக்கள் பதிவேட்டை (NRC) மறைமுகமாக அறிமுகப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

வாக்களிக்கும் உரிமைக்காக போராட்டம் நடத்துவோம்!

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மற்றும் சுதந்திரத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்துவரும் பின்னணியில், இவ்விவகாரத்தை நீதி மன்றம் நல்லமுறையில் அணுகும் என்று மக்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு நீதி மன்றத்தின் இத்தீர்ப்பின் மூலம் பொய்த்துப் போயுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும், விரிவான தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரியும் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்த நாடு தழுவிய போராட்டத்தில், ஒத்த சிந்தனையுடைய கட்சிகளையும் சக்திகளையும் அணிதிரட்ட கட்சி முயலும்.

Leave a Reply