சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் 27.5.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். பாரா 16ல் தன்னுடைய வாதங்களை குறிப்பிட்டு மேலே உள்ள விதிமுறைகளையெல்லாம் கணக்கில் கொண்டால் அனுமதிபெற்றுள்ள இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் பலியிடக் கூடாது என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அது தான் சட்டம் என்று அவர்கள் கருதும்பட்சத்தில் அனைத்து விலங்குகளையும் பலியிடுவதற்கு தடை விதித்திருக்கக் கூடும். ஆனால், மாடு மற்றும் கன்றுகளுக்கு மட்டும் பொருந்துவதாகவும் பக்ரீத் என்கிற பண்டிகையை குறிப்பிட்டும் தீர்ப்பு வழங்கியிருப்பது முற்றிலும் ஆட்சேபகரமானதும், உள்நோக்கமும் கொண்டதாகும்.
ஆடு, மாடு, கோழிகளை நேர்த்திக் கடன் செய்யும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. உணவுக்காகவும் மாடுகளையும் கன்றுகளையும் பலியிடுகிற வழக்கமும் இருக்கவே செய்கிறது. இதனை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுவது ஒருபகுதி மக்களின் உணவுப் பழக்கத்திலும், வழிபாட்டு முறைகளிலும் தலையிடுவதாகும். கடந்த காலத்திலும் மத துவேஷத்தோடு இத்தகைய கோரிக்கைகள் வந்தபோதெல்லாம் இந்த பழக்கத்தை கடைபிடிப்போரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு முதல் தினம் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருப்பது பொருத்தமற்றதாகும்.
எனவே, காலதாமதமின்றி மேல்முறையீடு செய்து உரிய நியாயத்தையும், மக்களின் உணவு உரிமையை நிலைநாட்டிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







