தீர்மானங்கள்

சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்; இரண்டாவது நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மாநிலக்குழு கூட்டம் Day

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 அக்டோபர் 23, 24 தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி.வி.ராகவலு, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

தீர்மானம் 1:

மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் கடுமையான விலை உயர்வு! கட்டுப்படுத்திட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) மாநிலக்குழு வலியுறுத்தல் !!

தமிழ்நாட்டில் சாதாரண மக்களைப் பாதிக்கிற சில்லறை விலை பண வீக்கம் 6.81 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறி மற்றும் அன்றாட உபயோக பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருப்பது சாதாரண நடுத்தர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, ஆன்லைன் வணிகம், பதுக்கல் ஆகியனவும் விலை உயர்வுக்கான காரணங்களாக உள்ளன. ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் தரமும் குறைவாக இருப்பதால் மக்கள் வெளிச் சந்தை நோக்கித் தள்ளப்பட்டு அதுவும் விலை உயர்வுக்கு இட்டுச் சென்றுள்ளது.

உணவுப் பொருள் பண வீக்கம் தமிழ்நாட்டில் 10.62 சதவிகிதமாக உள்ளது.  வருமானத்தில் அதிக சதவீதத்தை உணவுக்காக செலவழிப்பது எளிய நடுத்தர மக்கள் எனும் போது இந்த விலை உயர்வுகளின் தாக்கம் யாரை அதிகம் பாதிக்குமென்பது வெள்ளிடை மலை.

ஏற்கனவே ஊட்டச் சத்துக் குறைபாடு பெண்களை,  குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் உணவுப் பொருள் விலை உயர்வு உடல் நலத்தின் மீதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. தமிழ்நாட்டில் 25 சதவிகிதம் அரிசி ஆலைகள் இயங்குவதற்கே சிரமப்படுகின்றன.

எத்தனால் உற்பத்திக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மடைமாற்றம் செய்யப்படுவதாலும் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.

பண வீக்கம் என்பது வெறும் பொருளாதார  நிகழ்வு அல்ல. அது மக்கள் கைகளில் புழங்கும் பணத்தைத் தட்டிப் பறிப்பதே ஆகும். சர்வதேச சந்தை விலை உயர்வு எனும்  போது அதன் தாக்கமும் மக்கள் மீது சுமைகளை ஏற்படுத்துகிறது. சாதாரண குடும்பங்களின் கடன்கள் அதிகமாக உயர்ந்து வருவதை பொருளாதார ஆய்வுகள் வெளிப்படுத்தும் நிலையில் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கிற விலை உயர்வுகள் மேலும் கடன் அதிகரிப்பிற்கே வழி வகுக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

அகில இந்திய அளவில் நவீன தாராளமய காலத்தில் அரசு விலைக் கட்டுப்பாடு என்பதை அநேகமாக கைவிட்டு விட்டது. பொது விநியோக முறையும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மக்களின் வாழ்வுரிமை பெரிதும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு உழைக்கும் மக்களின் பாதிப்பை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஒன்றிய அரசே, நவ தாராளமயக் கொள்கைகளை மாநிலங்கள் மீதும் திணிக்கிறது.

இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும்,  மாநில அரசு பொது விநியோக முறையைப் பலப்படுத்தி அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மலிவு விலையில் அளிக்க நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2:

பதிவுத்துறை பணிகள் தனியார் வசம் ஒப்படைப்பு டெண்டரை திரும்பப் பெறுக! சிபிஐ(எம்) மாநிலக்குழு கோரிக்கை

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை “மாதிரி பதிவு மையத்திற்கான” டெண்டர் ஒன்றை விடுத்துள்ளது. இது அரசின் முக்கியமான துறையான பதிவு துறையின் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு வழி வகுப்பதாக உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.

இந்த டெண்டர் “மாதிரி பதிவு மையங்களை” நடத்துவதற்கான சேவை வழங்குபவர்களை தேர்ந்தெடுப்பதற்கானதாகும். சென்னையில் அம்பத்தூர், திருவான்மியூர், தியாகராயர் நகர் மற்றும் செங்கல்பட்டு, கோவை ஆகிய 5 இடங்களில் வெள்ளோட்டமாக முதற்கட்டமாகவும், மேலும் 20 இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் தனியார் பத்திரப் பதிவு மையங்கள் அமைக்க அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதன் மூலம் ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் சேவை வழங்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அதன் பின்னர் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதிவுத்துறை நிர்வாகப் பணிகளை முழுமையாக தனியார் வசம் ஒப்படைப்பதற்கான துவக்கமே ஆகும். பதிவு செய்வதற்கான அதிகாரங்களை மட்டும் அரசு நிர்வாகத்தின் வசம் வைத்துக்கொண்டு இதர நடைமுறை பணிகள் எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாகும்.

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை என்பது அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 22,000 கோடிகளுக்கு மேல் வருமானத்தை ஈட்டித்தருகிற துறையாகும். ஜிஎஸ்டி முறைமை அமலான பின்னர் மாநில அரசின் வரி அதிகாரங்களுக்கு உட்பட்டு இருக்கிற எஞ்சிய இனங்களில் மிக முக்கியமானதுமாகும். ஏற்கனவே தனியார் ரியல் எஸ்டேட் பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் என பல தலையீடுகள் இருக்கிற, இவ்வளவு வருவாய் புழங்கும் ஒரு துறையில் தனியார் நுழைவு  நிறுவனப்படுத்தப்படுகிற ஏற்பாடே இது. எந்த வகையிலும் மக்களுக்கோ, அரசு நிர்வாகத்திற்கோ இம்முடிவு நன்மை பயப்பதல்ல.

எனவே, இந்த முடிவை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்

Leave a Reply