செய்தி அறிக்கைமாநில செயற்குழு

‘அக்னிபாத்’ திட்டத்தை கண்டித்து – சிபிஐ (எம்) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

Capture

இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள
– சிபிஐ (எம்) அறைகூவல்!!

                இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஆளெடுப்பிற்காக பாஜக ஒன்றிய அரசு அக்னிபாத் எனும் பெயரில் மிக மோசமானதொரு திட்டத்தினை அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின் படி பதினேழரை வயதில் இருந்து இருபத்து மூன்று வயது வரையிலான இளைஞர்கள் நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள் எனவும், குறிப்பிட்ட நான்காண்டுகளுக்கு பிறகு அதில் இருந்து 25 சதவிகித வீரர்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் அளிக்கப்பட்டு, எஞ்சியவர்கள் வேலையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின்படி இந்த ஆண்டு முதற்கட்டமான 46,000 வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், வரும் ஆண்டுகளில் நிலைமைகளுகேற்ப புதிதாக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் மிக மிக மோசமானதொரு முன்மொழிவாகும். வேலைக்காக காத்திருக்கும் இந்திய இளைஞர்களின் நிரந்தர வேலைவாய்ப்பு கனவில் மண் அள்ளிப்போடுவதோடு, ராணுவத்தின் கட்டமைப்பையும் பலவீனப் படுத்துவதாகவும் இத்திட்டம் உள்ளது.

                ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளதோடு, இளைஞர்கள் கோபாவேசமான போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பீகார், தெலுங்கானா, உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளன. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இளைஞர்களின் போராட்டம் வலுக்கிறது. பீகாரில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் வழியாக செல்லும் 340 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகைய வலுவான எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகும் கூட இத்திட்டத்திலிருந்து ஒன்றிய அரசு பின்வாங்கப் போவதில்லை என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.

                பாஜக ஒன்றிய அரசின் இத்தகைய தான் தோன்றித்தனமான அணுகுமுறையை கண்டித்தும், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாகும் அக்னிபாத் திட்டத்தை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழகத்திலும் கண்டன குரலை எழுப்புவதோடு, வலுவான  எதிர்ப்பியக்கங்களையும் நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டமிட்டுள்ளது.

                எனவே, மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெறும் இந்த கண்டன இயக்கங்களில் இளைஞர்கள், மாணவர்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,   தொழிற்சங்க அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் பெருமளவில் பங்கேற்று இவ்வியக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும்,  ஒன்றிய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்தை முறியடிக்கும் வகையில் ஒன்றுபட்டு அணிதிரள வேண்டுமெனவும் அனைத்து பகுதியினரையும் கட்சி அறைகூவி அழைக்கிறது.

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu