தீர்மானங்கள்மாநில செயற்குழுமாநிலக் குழு

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்திடுக!

கடற்கரை மண்டல Copy

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (coastal zone Management) தயாரிக்க மாநில அரசின் சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கான வரைவுத் திட்டத்தை மாநில அமைச்சகத்திற்காக நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம், சென்னை (National center for sustainable coastal management) தயார்செய்துள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி (இணைப்பு IV, பத்தி 6) படி வரைவு திட்டம் தயாரிக்கப்பெற்று சுற்றுச்சூழல் துறையின் இணையத்தில் 07-10-2022 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அரசுதுறைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்து/மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்க நவம்பர்-21ந் தேதி காலக்கெடுவிதித்துள்ளது.

CRZ-2019 வரைவுத் திட்டம்:- தற்போது, புதியதாக அறிவிக்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் படி வெளியிடப்பட்டுள்ள வரைவு திட்டத்தில் தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களுக்கான 117 உத்தேச வரைபடங்களைத் தயாரித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம அளவில் வரைபடங்களைத் தனித்தனியே தரவிறக்கம் செய்து பார்க்க முடியும்.

குளறுபடிகள்:- திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வரைப்படங்களில் நிறையக் குளறுபடி உள்ளது. உயரலைக்கோடு, தாழ்வலைக்கோடுகள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ள தாகவும்; மீனவ கிராமங்கள் மற்றும் அதன் பொதுச் சொத்துக்கள் விபரங்கள் சரியாக பதியப்படவில்லை. மீன் இறங்கு தளம், மீன் காய வைக்கும் இடம், படகுகள் நிறுத்தும் இடம், வலைகள் பழுது பார்க்கும் இடம், விளையாட்டு மைதானம், கோவில்கள் என்று அனைத்தும் முறையாகப் பதியப்படவில்லை. மாவட்ட அளவிலான திட்ட அறிவிப்புகளே உள்ளன, பகுதி வாரியாக அறிவிப்புகள் கொடுக்க வேண்டும்

மாவட்ட அளவிலான திட்டம் மேலாண்மை குழுவில் மூன்று மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மீனவர்களின் பிரதிநிதித்துவத்தைப் புறக்கணித்து வருகின்றனர். மீனவர்கள், கடற்கரைவாழ் மக்களின் கருத்துகளை உள்ளடக்கியே வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான முயற்சிகள் எதையும் திட்டவரைவு குழுவினர் மேற்கொள்ளவில்லை. மீனவர் நல அமைப்புகள் பலவும் இவ்வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காலக்கெடு நீட்டிப்பு தேவை:- இத்திட்ட வரைபடங்கள் மீதான மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிக்க நவம்பர்-21 தேதி வரை சுற்றுச்சுழுல் துறை காலக்கெடு விதித்துள்ளது. இவ்வரைப்படங்களின் அடிப்படையிலேயே இனிவரும் தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பதோடு, கடற்கரை சூழலும், மீனவர் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் எனும் வகையில் இவ்வரைபடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வரைபடங்களை ஆராய்ந்து கள சூழலோடு சரிபார்ப்பது இத்தொழில்நுட்பம் அறிந்த வல்லுநர்களுக்கு மட்டுமே சாத்தியம். இத்திட்ட வரைவோடு நேரடியாகத் தொடர்புடைய மீனவர்கள், கடற்கரை வாழ் மக்களின் கருத்தை பெறாமல் வரைபடங்களை இறுதிசெய்வது நியாயமாகாது. எனவே, வரைவு திட்டத்தின் மீதான மாற்றுக்கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவை இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கச் சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை பரிசீலிக்க வேண்டும் என சிபிஐ (எம்) மாநில குழு கோருகிறது.