மற்றவை

சேலம்: வழிபாட்டு உரிமையை மறுத்த கோயிலுக்கு சீல் வைப்பு தீண்டாமைக்கு எதிராக தொடர் நடவடிக்கை தேவை சி.பி.ஐ (எம்) வலியுறுத்தல்

Salem

சேலம் மாவட்டம், விருதாசம்பட்டியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதையொட்டி, வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலுக்கு பூட்டு போட்டுள்ளார்கள். சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுத்து தீண்டாமை கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாததாகும். அரசு இவ்விசயத்தில் தீவிரமாக தலையிட்டு, அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை உறுதி செய்ய வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சக்தி மாரியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அண்மையில் கோயில் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா திட்டமிடப்பட்ட நிலையிலேயே அனைத்து மக்களுக்கும் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரச்சனை முன்னுக்கு வந்தது. கடந்த காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பேச்சுவார்த்தையில், முடிவு எட்டப்பட்ட நிலையில், குடமுழுக்கு சமயத்தில் சிறப்பு பூசையின்போது வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையும் கோயிலுக்கு பூட்டுபோட்டுவிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் உறுதியோடு செயல்பட்டு, தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டும், பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உத்தரவாதப்படுத்திட வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.