சமூக விரோதிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடியிருந்து வருகின்றனர். இம்மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் சமூக விரோதிகள் மலத்தை கலந்துள்ளதால் அதனை பருகிய சிறுவர், சிறுமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையம், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோதிகளின் இந்த நாசகர நடவடிக்கையையும், தீண்டாமை வன்கொடுமையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அக்கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின மக்களை வழிபடவும், பொது இடங்களை பயன்படுத்தவும் சாதி ஆதிக்கவாதிகள் மறுத்து தீண்டாமையை கடைபிடித்து வந்துள்ளதாகவும், தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை கடைபிடிப்பதாகவும் தெரிய வருகிறது. இது அப்பட்டமான தீண்டாமை வன்கொடுமையின் உச்சமாகும்.
எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டுமெனவும், அங்கு நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டிடவும், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.