மற்றவை

தமிழ்நாடு ஆளுநரின் செயல்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

Temp Copy

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயலானது, அரசமைப்புச் சட்ட விதிகளை வெட்கமின்றி மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர் என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் குரலாகத்தான் செயல்பட வேண்டும். மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உரையை முழுமையாக அவர் படிக்க வேண்டும் என்பதுதான் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்டு வந்துள்ள மரபு. இப்போது அவர் அவ்வாறு தயார் செய்யப்பட்ட உரையில் சில பகுதிகளைப் படிக்காமல் தாவிச் சென்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

மேலும் சட்டம்-ஒழுங்கு துறையில் மாநில அரசின் சாதனையை அவர் படிக்காமல் தவிர்த்திருப்பதை ஆராயும்போது, அவர் எந்த அளவிற்கு மாநில அரசாங்கத்திற்கு எதிராக விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

சட்டம்-ஒழுங்கு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் பிரத்யேக உரிமை. மேலும், அவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பாரம்பரியங்களை உயர்த்திப் பிடித்த தலைவர்களின் பங்களிப்புகள் தொடர்பான வாசகங்களையும் படிக்காமல் தவிர்த்துள்ளார்.

ஆளுநர் ரவியின் செயல்கள், தற்போதைய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் கீழ், ஆளுநரின் அலுவலகம் என்பது மாநில அரசாங்கங்களின் அரசமைப்புச் சட்ட பங்களிப்புகளை அரித்து வீழ்த்துவதற்கான ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் இந்தப் போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் அவருடைய செயலானது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான போக்காகும். அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பெருவிருப்பத்தையுமே அவரது செயல்கள் காட்டுகின்றன.