கடிதங்கள்செய்தி அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சமூக விரோத சக்திகளின் நடவடிக்கையினை அறவே ஒழித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்

2023 01 18 251755 702cde4a 2

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக விரோதிகள் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இரவு நேரங்களில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு, பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை  உள்ளிட்டு சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகயை அறவே ஒழித்திடும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியும், காவலர்களை கூடுதலாக நியமிக்கவும், இரவு நேர ரோந்து பணிகளை அதிகப்படுத்திடவும், புறகாவல் நிலையங்களை கூடுதலாக்கிட வலியுறுத்தியும்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்;

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சமூகவிரோத சக்திகளின் நடவடிக்கையினை அறவே ஒழித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்

18.01.2023

பெறுதல்

                மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
                தமிழ்நாடு அரசு,
                தலைமைச் செயலகம்,
                சென்னை – 600 009.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-      காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கத்தி முனையில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை –  இரவு நேரங்களில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்டு சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக தொடர்கதையாகி வருவது – பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும்  பதற்றமும் உருவாகியுள்ளது – சமூக விரோத சக்திகளின் நடவடிக்கையினை ஒழித்திட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுவது தொடர்பாக:

காஞ்சிபுரம் மாவட்டம், விசாலாட்சி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இச்சம்பவம் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாமாக முன்வந்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது பாராட்டுக்குரியதாகும். அதுபோல் ஸ்ரீபெரும்புதூரில் கத்தியைக் காட்டியும், காவலர்கள் என்று கூறியும் இரவு நேரங்களில் பணம் பறிப்பு, செயின் பறிப்பு மற்றும் பணிக்கு சென்று வீடு திரும்பும் 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சமூக விரோத சக்திகளையும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் நகரம், வாலஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் இப்பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் இரவு – பகலாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஆளில்லாத இடங்களில் சமூகவிரோதிகள் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப் பொருட்களை உட்கொண்டு அப்பகுதியில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு மற்றும் கத்தியைக் காட்டி இளம் பெண்களை பாலியல் சீண்டல் செய்வது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற குற்றச் செயல்கள் அதிகம் செய்து வருகின்றனர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளாக இத்தகைய சமூகவிரோத நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இச்சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் அரசியல் செல்வாக்கின் காரணமாக கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்தின் காரணமாக காவல்துறையில் புகார் அளிக்கவும் அஞ்சும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதிய அளவில் காவல்துறையினர் எண்ணிக்கை இல்லாததும், ரோந்து நடவடிக்கைகள் குறைந்துள்ளதும் இச்சம்பவங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூகவிரோத சக்திகளின் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், சட்டவிரோத போதைப் பொருட்களை தடை செய்வதற்கும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், பற்றாக்குறையாக உள்ள காவலர்கள் இடத்தை உடன் பூர்த்தி செய்திடவும், காஞ்சிபுரம் நகரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களில் காவல்துறை இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்திடவும், சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடங்களில் புறக்காவல்நிலையங்களை கூடுதலாக்கிடுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்