கடிதங்கள்செய்தி அறிக்கை

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலையை நிகழ்த்திய காவலர்களை உடனடியாக கைது செய்க! முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

Websiite Copy

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள் : கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டாம்பாக்கம் சுப்பிரமணி லாக்கப் மரணம் – கொலை மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – இதுவரை குற்றவாளிகள் இடை நீக்கமோ, கைதோ செய்யப்படவில்லை – குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகியோரை இடைநீக்கம் செய்து, கைது செய்ய கோருவது சம்பந்தமாக:-

            கடலூர் மாவட்டம், பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், விசாரணைக்காக கடந்த 29.02.2015 அன்று நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு காவல்துறை ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்களால் அழைத்து செல்லப்பட்டு, சித்தரவதை செய்து அடித்து கொல்லப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என (இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 174) வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

            சிபிசிஐடி விசாரணையில் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் மூன்று பேர் மீதும்  ரு/ளு 218, 330, 343, 348, 304 (ஐஐ) ஐஞஊ என வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை “கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்காக” மாற்றிட வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் இப்பிரிவுகளை இணைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பும் பெறப்பட்டது. இத்தீர்ப்பின்படி கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளை இணைத்து கடலூர் மாவட்ட  நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு  பிறப்பித்தது.

            இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கு சுமார் 7 ஆண்டு காலம் நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதன் பின்னரும் குற்றம் சுமத்தப்பட்ட காவல் ஆய்வாளர்  ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகியோர் இதுவரை கைதும் செய்யப்படாமல், ஒருநாள் கூட இடைநீக்கமும் செய்யப்படாமல் தொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி மறைந்த சுப்பிரமணியத்தின் மனைவி ரேவதிக்கு மிரட்டல் விடுப்பதும், உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பயன்படுத்தி இந்த வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

            இது மட்டுமின்றி மேற்படி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தின் காவல் நிலையங்களிலேயே பணியாற்றி வருகின்றனர். தற்போது குற்றம் நடந்த நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் ராஜா பிப்ரவரி 2023ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து இங்கே பணியில் நீடிப்பது சட்டத்திற்கு விரோதமானது மட்டுமின்றி, இவ்வழக்கை முடக்குவதற்கும், சாட்சிகளை கலைப்பதற்கும் தனது அதிகாரங்களை பயன்படுத்திட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் உள்ளிட்டோர் பணியில் நீடிப்பது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல, சட்டவிரோதமும் கூட.

            எனவே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள இவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, கைது செய்திட உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதுவரை இவர்களை கடலூர் மாவட்டத்திற்கு வெளியில் பணி மாறுதல் செய்ய வேண்டுமென கோருகிறோம்.

நன்றி.