கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநகரில் மாமேதை காரல் மார்க்சின் உருவச்சிலையை நிறுவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

Karl Marx Monument In Chemnitz 2018

18.04.2023

பெறுதல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
தமிழ்நாடு அரசு, சென்னை – 600 009.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- தமிழ்நாடு அரசின் சார்பில் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் உருவச்சிலையை சென்னை மாநகரத்தில் அமைத்திட கோருதல் தொடர்பாக:

இந்த நூற்றாண்டு பிறந்தபோது கடந்த 1000 ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் யார் என்று பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் உலகம் முழுவதும் உள்ளவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் மாமேதை காரல் மார்க்ஸ். உலகை வியாக்கியானம் செய்தவர்கள் மத்தியில் மாற்றுவதே கடமை என்பதை வலியுறுத்திய முதல் மனிதர்.

எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும்,சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் மனித சமூகம் முழுவதையும் விடுவிப்பதற்கான அறிவாயுதத்தை வழங்கிய மகத்தான மனிதன் காரல் மார்க்ஸ். காரல் மார்க்ஸோடு முரண்பட்டவர்கள் இருக்கலாம்.

ஆனால், யாராலும் மறுதலிக்க முடியாத மாபெரும் சிந்தனையாளர் அவர் விளங்குகிறார். அல்லப்பட்டு ஆற்றாது அழும் ஒவ்வொரு மனிதனுக்குமான நம்பிக்கை கீற்றை விதைத்த பேராசான் தோழர் காரல் மார்க்ஸ். இதன் காரணமாகவே கடந்த நூற்றாண்டில் துவக்கத்திலேயே தந்தை பெரியார், தோழர் ஏங்கல்ஸோடு இணைந்து மார்க்ஸ் தீட்டிய கம்யூனிஸ்ட் அறிக்கையை தனது குடியரசு இதழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழில் கம்யூனிஸ்ட் அறிக்கை முதன் முதலில் வெளியானது குடியரசு இதழில்தான்.

இன்று இந்திய மக்களுக்குள்ளேயே கூட பகைமையை, மோதலை, வெறுப்பை விதைக்கும் சனாதன சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்கிற அறைகூவல் வேறு எந்த காலத்தையும் விட இன்று முக்கியத்துவமும், பொருத்தப்பாடும் உள்ளதாக மாறியிருக்கிறது.

எனவே, மாமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்களை என்றென்றும் நினைவு கூறும் வகையில் தமிழ்நாட்டின் தலைநகரில் பொருத்தமான ஒரு இடத்தில் அவருக்கு அரசின் சார்பில் சிலை ஒன்றை நிறுவி பெருமை சேர்க்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மட்டுமின்றி, எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் முடிவுகட்ட வேண்டுமென்று கருதுகிற மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்