கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

Untitled 1

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

           தமிழ்நாடு அரசு,

           தலைமைச் செயலகம்,

           சென்னை - 600 009.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிட கோருதல் தொடர்பாக:

           தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 12.4.2023 அன்று தொழிற்சாலைகள் சட்டத்தில் பிரிவு 65 ஏ திருத்தமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தமானது தொழிலாளர்களது உரிமை, போராட்டங்களுக்கு முற்றிலும் முரணாகவும், எதிராகவும் தினசரி வேலைநேரம் உள்ளிட்ட வேலை நேரம் தொடர்பான தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த சட்டத் திருத்தம் இல்லாமல் செய்துவிடும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, தொழிற்சாலைகள் சட்டத்தில் அவசர நேரங்களிலும், தேவையான தருணங்களிலும், தொழிற்சாலை ஆய்வாளரின் அனுமதி பெற்று சில விதிவிலக்குகளை பெறுவதற்கு தொழிற்சாலைகள் சட்டம் வழிவகை செய்திருக்கும் நிலையில், எவ்வித கேள்வி கேட்பாறின்றி முதலாளிகள் தங்கள் விருப்பம் போல தொழிலாளர்களை சுரண்டுவதற்கு தங்கு தடையற்ற அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் முதலாளிகளுக்கு வழங்குகிறது.

           சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள் குறித்த விளக்கவுரையில் இத்திருத்தம் தொழிலகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தொழிலாளர்களின் நலச் சட்டங்களை திருத்துவது அவர்களின் உரிமைகளை பறிப்பது மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கும் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

           இந்த சட்டத்திருத்தம் தொழிலாளர்கள் நீண்ட நெடுங்காலமாக போராடி பெற்ற 8 மணி நேர வேலை என்பதை இல்லாமல் செய்வதாகும். மே தினம் என்பதே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை சட்டப்பூர்வமாக போராடி வெற்றிபெற்றதை குறிப்பதற்கான தினமாகும். இந்த ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலில் சென்னையில் தோழர் எம். சிங்காரவேலு அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டதன் 100வது ஆண்டாகும். தமிழ்நாட்டில் மே தினத்திற்கு முதன்முதலாக விடுமுறை அளித்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் அரசு என்பதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவில் முதலீடுகள் அதிகம் உள்ள மாநிலங்களில், இத்தகைய சட்டத்திருத்தத்தை முன்மொழிந்திருக்கும் பாஜக அல்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து மக்களோடு இணைந்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிக் கொண்டிருந்த போது விவாதமோ, வாக்கெடுப்போ இல்லாமல் முற்றிலும் சர்வாதிகாரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் நிறைவேற்றுவது எந்த வகையிலும் நியாயமற்றது.

           மேலும், இந்த தொழிலாளர் தொகுப்புகள் நான்கையும் எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிய போதெல்லாம் அதன் ஒரு பகுதியாக தொமுச இருந்திருக்கிறது என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம். மையத் தொகுப்பு சட்டம் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டும் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படாத நிலையில் இதனை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு மேற்கொண்டுள்ளதானது நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

           எனவே, மே தின போராட்டங்கள், தியாகங்கள், பாரம்பரியம் இவையனைத்திற்கும் எதிரான, தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டுவதற்கு தங்குதடையற்ற அதிகாரமளிக்கும் தொழிலாளர்கள் விரோதமான, பிற்போக்குத்தனமான இந்த சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.