அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை உள்ளிட்டு வாழ்வியல் திறன் பாடங்களை கற்றுக் கொடுக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 10,000/- தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி விடுமுறையான மே மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை. வயது மூப்பு காரணமாக வேறு பணிக்கு செல்ல முடியாததால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் சம்பளம் வழங்கப்பட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநரகம் பகுதி நேர ஆசியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என்று அறிவித்திருப்பது பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்குவதோடு, நீண்ட காலமாக மிககுறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து இக்குடும்பங்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.