உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்

பாஜக ஆட்சியில் சாதிய வளாகமாவதா உயர்கல்வி நிறுவனங்கள்! 26 ஆயிரம் மாணவர்கள் வெளியேறிய அவலம்!பாஜக ஆட்சியின் வேதனை – சிபிஐ(எம்) கண்டனம்!!

Cpim
           ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களும், மத்திய பல்கலைகழகங்களும் நாட்டிலேயே மதிப்புமிக்க நிறுவனங்களாக பார்க்கப்படுகின்றன. ஆனால், அங்கே கடும் பயிற்சிக்குப் பின் இடம்பிடிக்கும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மை மாணவர்கள் 26,000 பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.  இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின், உயர்கல்வி நிறுவனங்களிலும் சாதிய பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதையே இந்த விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

            ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இடைநிற்றல் பற்றிய விபரங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளின் மூலம் அவ்வப்போது தெரிய வருகின்றன. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் வெளியான விபரங்களின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டு பிரிவில் 5 ஆண்டுகளில் சுமார் 19,000 மாணவர்கள் இடையில் வெளியேறியது தெரியவந்தது. இப்போது அந்த எண்ணிக்கை சுமார் 6,500 அதிகமாக இருப்பதை கடந்த ஜூன் 26 ஆம் தேதி அமைச்சர் வெளியிட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன.

            இடைநிற்றல் மூலம் வெளியேறிய 32,000 மாணவர்களில் 25,593 பேர் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மற்றும் சிறுபான்மை சமுதாயங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக, பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள் 4,423, பட்டியல் பழங்குடியினர் 3,774, இதர பிற்படுத்தப்பட்டோர் 8,602 பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்; சுமார் 39 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

            ஐ.ஐ.டி நிறுவனங்கள், ஐ.ஐ.எம்., என்.ஐ.டி, போன்று பல்வேறு விதமான உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசாங்கம் நடத்தி வருகிறது. பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கும் நிதியில் அதிகமான பங்கினை (10 சதவீதம் வரை)  இந்த நிறுவனங்களே பெறுகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு முறை அமலாவதில்லை. எனவே, அந்த வளாகங்களில் சில உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவ்வாறு தொடரும் சாதிய சூழல் பாஜக ஆட்சியில் மேலும் வலுப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் கூட பதவி விலக நேர்வதும், ஒடுக்குமுறையை எதிர்கொள்வதையும் பார்க்கிறோம்.

மத்திய பல்கலை கழகங்களின் நிலைமையும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மோசமாகியுள்ளது. பாஜகவால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களின் அணுகுமுறையால் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்டதை அறிவோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கல்விச் சூழலை சிதைப்பதற்கான பல்வேறு முயற்சிகளும் நடந்தன.

கல்வி உதவித் தொகை தொடர்ந்து வெட்டப்படுகிறது, சிறுபான்மை கல்வி உதவி மறுக்கப்படுகிறது, வாய்ப்புள்ள விதத்தில் எல்லாம் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்டு உயர்த்தப்பட்டன. கல்வி வளாகங்களில் பிற்போக்கு பிரச்சாரமும், மாணவர்களிடையே சாதி / மத வெறுப்பினை விதைப்பதும் தொடர்கின்றன. பாஜகவின் இந்த கேடுகெட்ட போக்கினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கண்டிக்கிறது.

பல்வேறு தகுதித் தேர்வுகளிலும், நுழைவுத் தேர்வுகளிலும் வென்று இந்த உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணவர்கள் படிக்க முடியவில்லை, சொந்த காரணம் மற்றும் மருத்துவ காரணங்களால் இடையில் நின்று போகிறார்கள் என்று ஒன்றிய அரசாங்கம் பட்டியலிடும் காரணங்கள் கண் துடைப்பே ஆகும். சென்ற ஆண்டே இதுபோல காரணங்களை சொன்ன அரசு, உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, கல்வி நிலையங்களை சீரழிப்பதையே குறிக்கோளாகவும் கொண்டு செயல்பட்டது.

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி சாதிகளை சேர்ந்த மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து தங்களது உயர்கல்வியை முழுவதுமாக முடித்து வெளியேறுவதற்கு உகந்த சூழலை உருவாக்கிட வேண்டுமெனவும், உயர்கல்வி நிலையங்களை காக்க, கல்வி வளாகங்கள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமெனவும், வணிகமய, காவிமய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்