மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா (30) என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிந்தபடி இந்தி பிராத்மிக் தேர்வு எழுதியவரை தேர்வு மைய கண்காணிப்பாளர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உடையை கழற்ற வேண்டுமென கடினமான தொனியில் கூறியுள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு அவர் தேர்வு எழுதாமல் வெளியேறியுள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளரின் இந்த மோசமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
சிறுபான்மை மக்களின் மதஉரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழாத வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஹிஜாப் உடையை அகற்ற வற்புறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.