உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தீண்டாமை ஒழிப்பு, மக்கள் ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவரும், சமூக நீதிக்கான போராளியாக தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமெனவும், அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 22.10.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை அளித்திருந்தோம்.
இதனை ஏற்று கவிஞர் தமிழ்ஒளி ஆற்றிய இலக்கிய பணிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இன்றைய இளைய தலைமுறையினர் அறியும் வகையிலும் அவரது நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கவும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க ரூபாய். 50 இலட்சம் வைப்பு தொகை வழங்கியும் இன்று (19.09.2023) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வரவேற்பதோடு, நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்