இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியும், முற்போக்கு சிந்தனை கொண்டவருமான திருமிகு எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றோம். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
வங்கத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சம் இவரை கடுமையாக பாதித்தது. அப்போதே வேளாண்துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து வேளாண் கல்லூரியில் பயின்று முதுகலை பட்டத்தை பெற்றவர். இந்திய அரசுப் பணியின் உயர்ந்த நிலை அதிகாரியாக தேர்ச்சி பெற்றும் அப்பணியில் சேராமல் வேளாண் துறையில் தடம் பதித்தவர். வேளாண் துறையில் மிகப் பெரிய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர். வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பம், தேசிய அளவிலான வலுவான வேளாண் ஆய்வு அமைப்பு மற்றும் விரிவாக்கப்பணி அமைப்பு உள்ளிட்ட பசுமை புரட்சி கொள்கைகளின் திட்டமிடுதலிலும், அமலாக்கத்திலும் பெரும் பங்காற்றியவர். கோதுமை, அரிசி உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்தவர். இந்தியாவில் பட்டினியைப் போக்கும் ஒரே வழி நிலையான வேளாண்மையை ஏற்படுத்துவது என்று பிரகடனம் செய்தவர்.
தேசிய விவசாயிகள் ஆணைய தலைவராக இருந்த போது, இடுபொருட்கள் உட்பட விவசாயிகளுக்கு ஆகும் மொத்த உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் கூடுதலாக வைத்து (மொத்தத்தில் ஒன்றரை மடங்கு உற்பத்தி செலவு) குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர். புதுதில்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தில் இது முக்கியமான கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மோடி அரசாங்கம் இதுவரை செயல்படுத்தவில்லை.
உலக அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, மத்திய வேளாண் துறை தலைவர், திட்டக்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ளவர். வால்வோ விருது, ராமன் மகசேசே விரு, உலக உணவு பரிசு, பத்மவிபூசன் விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர். வயது மூப்பு காலத்திலும் தனது ஆராய்ச்சி பணியை தொய்வில்லாமல் மேற்கொண்டவர்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி இந்திய விவசாயத்தில் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருவதும் - உலக அளவில் இந்நிறுவனம் பெரிதும் பாராட்டுக்களைப் பெறுவதும் இவரது முயற்சிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும். அவரது மறைவு உலக அளவில் வேளாண் துறை ஆராய்ச்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது குடும்பமே பொதுவாக சமத்துவ, முற்போக்கு விழுமியங்களில் நம்பிக்கையுள்ள குடும்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மகள்கள் சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்