ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை மற்றும் நெருக்கடியை போக்கிடும் வகையில் 2007ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் வல்லூர் அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசிற்கு சொந்தமான தேசிய அனல் மின்கழகம் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் இணைந்து சம அளவில் முதலீடு செய்து நடத்தும் வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70 சதம் தமிழகத்திற்கும், மீதமுள்ள மின்சாரம் தென் மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மட்டும் ரூபாய் 4230 கோடி வருமானம் ஏற்பட்டு இலாபம் ஈட்டும் அனல் மின்நிலையமாக வல்லூர் அனல் மின்நிலையம் திகழ்கிறது.
இந்த அனல்மின் நிலையத்தில் ஒரு நிரந்தர தொழிலாளி கூட இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2000 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டி வரும் ஒன்றிய, மாநில அரசுகளின் கூட்டு பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் இந்த நிலை நீடிப்பது அடிப்படை சட்டவிதிகளுக்கு விரோதமானது.
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென்று தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உற்பத்தியில் தங்களது முழு சக்தியையும் செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக வல்லூர் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல பிரிவுகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு சட்டப்படியான சலுகைகளை வழங்கிடுவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்