விருதுநகர் மாவட்டம், சிவகாசி, எம்.புதுப்பட்டி வெங்கபாளையம், கிச்ச நாயக்கன் பட்டி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் ; மேலும் பலர் காயமுற்றுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே, இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளனர். விபத்துகளில் உயிரிந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
இவ்வாறு கொடும் விபத்துகள் தொடர்கதையாகும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலை விபத்துகள் பெரும்பாலும் பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே, பாதுகாப்பு விதிகள் குறித்த அரசு கண்காணிப்பை அதிகரிப்பதுடன், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பிரிமீயம் தொகையினை சம்பந்தப்பட்ட பட்டாசு நிறுவனங்கள் செலுத்திட உத்தரவிட வேண்டுமெனவும், கூடுதல் நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும் மாநில அரசை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்