இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்துள்ள பயனாளிகளுக்கான ஊதியத்தை மாதக் கணக்கில் வழங்காமல் காலம் தாழ்த்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பருவமழை குறைவு, கர்நாடகத்திலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காதது கடுமையான கிராமப்புற வேலையின்மையை உருவாக்கியுள்ளது. அதோடு அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலையேற்றம் கிராமப்புற ஏழைகளை வாட்டி வதைக்கும் நிலையில், வேலை செய்ததற்கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பது மக்களை மேலும் வதைக்கும் செயலாகும்.
ஆகவே, ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில், ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை காலதாமதமின்றி உடனே வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்