இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் நவம்பர் 20,21, 2023 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் விரோதமாகவும், அரசியல் சாசனத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவது குறித்து தொடர்ந்து பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆளுநர் தனது போக்கை தொடர்ந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பிலேயே போட்டு வைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முடக்கி வருகிறார்.
ஆளுநரின் இந்த போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் ஆளுநரின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் 10 மசோதாக்களையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
அரசியல் சாசனப்படி ஆளுநர் இம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, தாமதமில்லாமல் உடனடியாக ஆளுநர் இம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிட வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்