இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் நவம்பர் 20,21, 2023 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியில் கணேஷ் ஆனந்த் என்ற முதுநிலை பொறியாளர் பட்டதாரி 2010ம் ஆண்டு முதல் டிராமோஸ் ஷாஃப்ட் பெயரில் சிறுதொழில் நடத்தி வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக 2017ம் ஆண்டு ஆர்.பி.எல். என்ற தனியார் வங்கியில் தனது வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடியே முப்பத்திரெண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கொரோனா காலம் வரை கடனுக்கான ஈவுத்தொகையை முறையாக செலுத்தி வந்துள்ளார். கொரோனாவினால் பெரும் தொழில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இவரால் மாதாந்திர ஈவுத் தொகையினை செலுத்த முடியவில்லை. இருப்பினும், 10 லட்சம் வரை செலுத்தியுள்ளார். மேலும் தனது கடனை மறு சீரமைப்பு செய்து தர வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால், வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. ஒன்றிய அரசின் சார்பில் சிறு-குறு தொழில் சீரமைப்புக்கு வழங்கப்பட்ட கூடுதல் கடன் தொகையை இவருக்கு வழங்காமல் வங்கி நிர்வாகம் கடன் பாக்கிக்கு வரவு வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் வங்கி நிர்வாகம் வழக்கறிஞர் மற்றும் முகம் தெரியாத அடியாட்களோடு வந்து கணேஷ் ஆனந்த் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்களை இரவுநேரம் என்று பாராமால் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு சீல் வைக்கும் அராஜக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சிறு தொழில் செய்து நாணயமாக வசித்து வந்த குடும்பத்தை சமூக விரோதிகளைப் போல வீட்டை விட்டு வெளியேற்றி நடுவீதியில் நிறுத்தியுள்ள வங்கியின் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளாலும், கொரோனா பாதிப்புகளாலும் சிறு-குறு தொழில்கள் நெருக்கடியில் சிக்கி அதன் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் விழி பிதுங்கி தவித்து வரும்சூழ்நிலையில் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக இத்தகைய அராஜகமான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்வதை ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கணேஷ் ஆனந்த் வீட்டுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி அவரிடம் வீட்டினை ஒப்படைக்கவும், அவரது கடன் பாக்கிக்கு Sarfaesi சட்டத்தின் படி குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. எதிர்காலத்தில் கடன் பாக்கிக்காக வீடுகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > தீர்மானங்கள் > மாநிலக் குழு > தீர்மானம் 3 சிறு-குறு தொழில் முனைவோர் வீடு ஜப்திக்கு கண்டனம்