இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05.01.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் மிக்ஜம் புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இதுவரை தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யாததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடுமையான துயரங்களைச் சந்தித்த தமிழக மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு செய்யும் மாபெரும் துரோகம் இது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மிக்ஜம் புயல் - வெள்ளம் மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளப் பெருக்கினால் சென்னை மற்றும் அருகாமை மாவட்ட மக்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். தங்களது வீடு, உடைமைகளை இழந்த மக்களும், விவசாயிகளும், மீனவர்களும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களும், சிறு கடை வணிகர்கள், உப்பள தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லொணா துயரங்களைச் சந்தித்தனர். வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவினரும், ஒன்றிய அமைச்சர்களும் நேரில் பார்வையிட்டு பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர். முதலமைச்சரும் பிறகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் பிரதமரை நேரில் சந்தித்து பாதிப்புகளை எடுத்துரைத்து ஒன்றிய அரசு உரிய நிவாரண நிதியினை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இவ்வளவுக்கு பின்னரும் நிவாரணப் பணிகளுக்கென இதுவரை தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய பாஜக அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதே உண்மையாகும். இந்நிலையில் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியினை தருவதற்கு பதிலாக, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து வரிப்பணம் பெற்றதை விட அதிகமாக வழங்கப்பட்டதாக கூறி வெள்ள நிவாரணத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்ற வகையில் ஒன்றிய நிதியமைச்சர் பேசியுள்ளார். இதையே பிரதமரும் வழிமொழிந்து உண்மைக்கு மாறான விபரங்களை எடுத்துக்கூறி வருகிறார். ஆனால், தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் நேரடி வரித்தொகையில் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது என்பதே உண்மை நிலையாகும்.
இந்தியாவில் பாஜக அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில் குறைந்த அளவிலேயே நிதி பகிர்வுகளை அளிப்பதும், தேசிய பேரிடர் காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யாமலும் அம்மாநில அரசுகளை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்க வைத்து மாநில அரசையும், நிர்வாகத்தையும் சீர்குலைக்கும் நோக்கோடு ஜனநாயக கூட்டாட்சி முறைக்கு விரோதமான நடவடிக்கைளையே ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருவதை நாடறியும். அந்த அடிப்படையிலேயே தமிழகத்தையும் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே, ஒன்றிய பாஜக அரசு அரசியல் உள்நோக்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் செயல்படுவதை கைவிட்டு விட்டு, வரலாறு காணாத புயல் மற்றும் கனமழையினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூபாய் 37,907 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்