சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 7 சதமானபங்கு விற்பனையை கைவிடுக! ஒன்றிய அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

Cpim 2 Copy

தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1956ஆம் ஆண்டு துவங்கப்பட்ட (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) என்.எல்.சி. நிறுவனம் 2015 ஆம் ஆண்டு என்எல்சி இந்தியா நிறுவனமாக மாற்றப்பட்டு நாடு முழுவதும் சுரங்கங்கள் தெர்மல், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 6000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நவரத்தின நிறுவனமாகும். ஆண்டுக்கு சுமார் 2000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமான நெய்வேலியில் 10 ஆயிரம் நிரந்தர பணியாளர்களும், 15,000 ஒப்பந்த தொழிலாளர்களுமாக சுமார் 25,000 பேர் வரையிலும், நெய்வேலிக்கு வெளியேயும் பல ஆயிரக்கணக்கான நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், இது 50 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது.

2002 ஆம் ஆண்டு 49•சதவிகிதம்•, 2006 ஆம் ஆண்டு 10 சதவிகிதம், 2013ஆம் ஆண்டு 5 சதவிகிதம் என இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது நெய்வேலி தொழிலாளர்களின் போராட்டத்தோடு தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக தடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. 20 ஆண்டுகளாக நடைபெறும் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை மீறி சிறுக, சிறுக இருபது சத பங்குகள் விற்கப்பட்டுள்ளன.

தற்போது 7 சதவிகித பங்குகள், சலுகை விற்பனை என்ற அடிப்படையில் ரூ.226/- விலையுள்ள பங்கை ரூ.212/-க்கு விற்பதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள   9 கோடிக்கும் அதிகமான இப்பங்குகளை பெரும்  கார்ப்பரேட் கம்பெனிகளால் தான் வாங்க முடியும்.  ரூ.2000 கோடி நிதி தேவைக்காக, ஆண்டுக்கு ரூ.2000  கோடி லாபம் ஈட்டி தரும் நவரத்தின அந்தஸ்து பெற்று விளங்கும் ஒரு நிறுவனத்தின்   பங்குகளை விற்பனை செய்வது,  படிப்படியாக இந்த ஒன்றிய பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியே என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் ) குற்றம் சாட்டுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு, கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய கொள்கைகளைத் தீவிரமாகக் கடைபிடித்து வருவதன் ஒரு பகுதியே இது என சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இந்திய நாட்டின் மின் தேவையில் முக்கிய பங்கினை ஆற்றிடும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகள் விற்பனை அறிவிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) வலியுறுத்துகிறது.

(கே. பாலகிருஷ்ணன்)

மாநில செயலாளர்