சென்னையில் ஏழை, எளிய பள்ளி மாணவிகளை குறி வைத்து பாலியல் வணிகத்தில் தள்ளி வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திடவும், வழக்கை மூன்று மாத காலத்திற்குள் முடித்து தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26.05.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
பொருள்:- சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் தள்ளி வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும் – சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்திடவும் – வழக்கை மூன்று மாத காலத்திற்குள் முடித்து தண்டனை பெற்றுத் தந்திடவும் – நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பாக:
சென்னை, தி.நகர், தாமஸ்சாலையைச் சேர்ந்த பெண் நதியா (37), அவரது சகோதரி சுமதி (43), சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் (42), இதே பகுதியைச் சேர்ந்த மாயா ஒலி (29) உள்ளிட்ட கும்பல், பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவிகளை குறி வைத்து ஏமாற்றி, மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. கடந்த இரண்டாண்டுகளாக இந்த கும்பல் பல ஏழை, எளிய பள்ளி மாணவிகளை வல்லுறவுக்கு ஆளாக்கியது தெரிய வருகிறது.
நதியா ஏற்கனவே சட்டவிரோதமாக பாலியல் வணிகத்தில் ஈடுபட்டவர் எனவும், தேனாம்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தவர் எனவும் தெரிகிறது. இவர் தனது சகோதரி மற்றும் பள்ளி மாணவியான அவரது மகளையும் பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அத்துடன் தன் மகள் மூலம் அவருடன் பள்ளியில் படிக்கும் ஏழ்மையான மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியுள்ளார். இதுபோல் பல்வேறு தொடர்புகளின் மூலம் தங்களிடம் சிக்கும் மாணவிகளை இத்தகைய கொடுஞ் செயலில் ஈடுபடுத்தியதுடன் அதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி பலமுறை இக்கொடுமைகளுக்கு ஆளாக்கியுள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் தங்களது தொடர்புகள் மூலம் இத்தகைய சிறுமிகளை பல பிரமுகர்கள், சமூக விரோதிகள் உள்ளிட்டு பலருக்கு அனுப்பி வன்புணர்வுகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒரு பள்ளிச்சிறுமி தன் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறியதை தெரிந்து இந்த பாலியல் கும்பல் சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டி காவல்துறைக்கு செல்லாத வகையில் பார்த்துக் கொண்டுள்ளனர். மற்றொரு மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறியதோடு பெற்றோர் உதவியுடன் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் மூலமாகவே இப்பிரச்சனை வெளிஉலகத்திற்கு தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் வெளிவந்தவுடன் காவல்துறை உடனடியாக குற்றச் செயலில் ஈடுபட்ட சிலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இரண்டாண்டுகளாக சிறுமிகளை பாலியல் வணிகத்தில் தள்ளிய குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக நின்றவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியுள்ளது. நேர்மையாகவும், சட்ட ரீதியாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை மேற்கொண்டால் இன்னும் பல்வேறு உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே நதியா கஞ்சா மற்றும் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து அவரை கண்காணிக்க வேண்டியது காவல்துறையினரின் கடமைகளில் ஒன்றாகும். காவல்துறை அவ்வாறு செயல்பட தவறி விட்டதா? அல்லது அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் உடந்தையாக இருந்தார்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்திலும், மேற்கண்ட சம்பவத்திலும் ஈடுபட்ட புரோக்கர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு பயன்படுத்தும் பிரமுகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தப்பிக்க விடுகிறார்கள். அரசியல் மற்றும் பண பலத்தின் காரணமாக இவர்கள் தப்பி விடுவதும், மீண்டும், மீண்டும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனையின் தீவிரம் கருதி உடனடியாக தலையிட்டு கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றிட அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
நதியா கடந்த இரண்டாண்டுகளாக ஏழை, எளிய பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியுள்ளார். இதுவரை இரண்டு பள்ளி மாணவிகள் மட்டுமே புகார் அளித்துள்ளனர். இதில் இன்னும் எத்தனை சிறுமிகள் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. எனவே, காவல்துறையினர் இவ்வழக்கை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் தீவிர விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி பொருத்தமான அதிகாரிகளைக் கொண்டு விசாரித்திட வேண்டும். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வழக்கில் மாணவிகள் யாருக்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பது சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் மூலம் விசாரித்து அடையாளம் காண்பது எளிதான ஒன்றாகும். எனவே, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைத்து பிரமுகர்களையும் பாரபட்சமின்றி விசாரித்து கைது செய்ய வேண்டும். எதிர்காலத்திலும் இத்தகைய பாலியல் வணிகத்தில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்திட உரிய வழிகாட்டுதல்களை காவல்துறைக்கு வழங்கிட வேண்டும்.
பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மாணவிகள் தொடர்பான வீடியோ, ஆடியோக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இக்கொடுமைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள லாட்ஜ், பங்களா, வீடு, விடுதி ஆகியவற்றை சீல் வைப்பதோடு அதன் உரிமையாளர்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நதியாவை காவல்துறையினர் தொடர்ச்சியாக கண்காணிக்காதது குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு வழங்குவதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர்கள் உயர்கல்வி உட்பட கல்வி கற்பதற்கும் தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும்.
போக்சோ சட்ட புரிதலுடன் விசாரணை அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் தடுத்திட தமிழ்நாடு அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி.
இப்படிக்கு,
தங்களன்புள்ள,/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்