விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்துகளை இறக்கிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குவாரியில் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பும் அதிகாரிக்க கூடும் என்று தெரிகிறது. இந்த வெடிவிபத்தினால் அருகில் உள்ள சுமார் 20 கி.மீ. தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உயிருக்கு பயந்து பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த கல்குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, இந்த விபத்து குறித்து உரிய முறையில் விசாரணை செய்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உயரிய தரமான சிகிச்சை அளிக்கவும், இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த கல்குவாரியை உடனடியாக மூடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும், இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை உரிய முறையில் கண்காணிக்கவும், உரிமம் இல்லாமலும், விதிமுறைகளை மீறும் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடுவதோடு சம்பந்தபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்