சட்டமன்றம்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைமாநில செயற்குழுமாநிலக் குழு

உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை இயற்ற அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்!

Out

வங்காளத்தின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் இளம் மருத்துவர் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறை மற்றும் கொலைக்கு எதிரான கோபமான போராட்டங்களில் மருத்துவர்கள், குறிப்பாக இளம் மருத்துவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்னிச்சையாக அணிதிரள்வது, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு அவர்கள் காட்டும் ஒருமைப்பாட்டை மட்டுமல்லாது, பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான வேலை நிலைமைகளுக்கு எதிரான மருத்துவர்களின் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக விரிவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கைக்குப் பதிலாக, மோடி அரசு  இந்தப் பிரச்சினையை ஆராய ஒரு குழுவை அமைக்க உறுதியளிக்கும் ஆட்சி அதிகாரத் தொனியிலான பதிலைத் தேர்ந்தெடுத்தது துரதிருஷ்டவசமானது. மருத்துவத்துறையினருடன் கலந்தாலோசித்து தாமதமின்றி இதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து ஆர்.ஜி.கார் வழக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான சட்டத்தை உருவாக்குவது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள்தான் உள்ளது. மேற்குவங்க மாநில அரசைப் பொறுத்த வரையில், அது நீதியின் செயல்முறைகளை நாசமாக்குவதையும், கேள்விகளை எழுப்பத் துணிந்த அனைவரையும் அச்சுறுத்துவதையும் ஒவ்வொரு நாளும் வெளிப்படும் புதிய புதிய ஆதாரங்கள் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்கு வங்க முதல்வர் மற்றும் அரசு மீது நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியது, பொது மக்களால் பெரிதும் எதிரொலிக்கப்படுவது, உண்மை நிலவரம் ஒவ்வொரு கட்டத்திலும் மூடிமறைக்கப்பட்டதையே பிரதிபலிக்கிறது.

உரிய சட்டத்தை இயற்ற ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான குற்றத்தைச் செய்த  குற்றவியல் தொடர்புகளை மறைத்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மேற்கு வங்க மாநில அரசின் முயற்சிகளுக்கு கண்டனங்களைத் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும்.