ஜனநாயகத்திற்கும் – மனித உரிமைகளுக்கும் எதிராகவும், அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடும் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (29.08.2024) சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு அனுப்பிய புகார் கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
வெ. ராஜசேகரன், அலுவலக செயலாளர்
பெறுநர் :
உயர்திரு காவல் ஆணையர் அவர்கள்,
பெருநகர சென்னை மாநகர காவல்துறை.
எழும்பூர், சென்னை – 600 008.
வணக்கம்.
பொருள்:- ஜனநாயக ரீதியிலும், அமைதியான முறையிலும் எங்களது கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைக்கும் நோக்கோடும், மனித உரிமையை பறிக்கும் வகையிலும் செயல்பட்ட – கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் திரு ரகுபதி அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு – உரிய நடவடிக்கை எடுக்க கோருவது தொடர்பாக:
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், தூய்மைப் பணி உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அறிவித்துள்ள தனியார்மயமாக்கல், வரி உயர்வு, மாநகராட்சி பள்ளிகள் மூடல் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து எங்களது கட்சியின் சார்பில் நேற்றைய தினம் (2024 ஆகஸ்ட் 28) ரிப்பன் மாளிகை அருகில் எனது தலைமையில் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள விக்டோரியா கட்டிட நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டத்திற்காக எங்களது தோழர்கள் திரண்டிருந்தனர். காலை சுமார் 11 மணி அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு அப்பகுதிக்கு நானும் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களான பி. சம்பத், என். குணசேகரன் மற்றும் தோழர்கள் சென்றபோது, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் திரு ரகுபதி அவர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு எங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியபடி 50 மீட்டர் தள்ளி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எங்களது தோழர்களோடு சென்றோம். ஆனால், துணை ஆணையர் அவர்கள் மேலும் உட்புற சந்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு வலியுறுத்தியதுடன் காவல்துறையினர் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை பிடித்து தள்ளினார். பெண்கள் என்றும் கூட பாராமல் அவர்களையும் பிடித்து தள்ளினார்.
அப்போது அவரிடம், “பொதுமக்களுக்கு இடையூறும் இல்லாமல் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருந்த இடத்திற்கு பதிலாக, நீங்கள் சொன்னதுபோல், 50 மீட்டர் தள்ளிவந்த பிறகும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல் தடுப்பது மற்றும் தள்ளி விடுவது சரியா? நீங்கள் தான் திட்டமிட்டு ஏராளமான காவலர்களை குவித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறீர்கள். உங்களது நடவடிக்கை தான் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.” என தெரிவித்த போது, துணை ஆணையர் ரகுபதி எங்களை ஒருமையில் பேசியும், கையை வைத்து தள்ளியும், அடாவடித்தனமாக செயல்பட்டார். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்த போது ‘கைது செய்ய வேண்டி வரும்” என மிரட்டும் வகையில் சத்தம் போட்டார். பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் புகைப்படம், ஒளிப்படம் எடுக்க விடாமல் தடுத்து மிரட்டினார். கடைசி வரையில் காவல்துறையினரை வைத்து சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கே அவர் அனுமதிக்கவில்லை. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சுமூகமாகப் போராட்டத்தை முடிக்கும் வகையில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து விட்டு கலைந்து செல்ல ஆரம்பித்த உடன், என்னிடம் ‘உங்களை கைது செய்கிறோம் என்று கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.
சென்னை மாநகருக்குள் மக்கள் பிரச்சனைகளில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை. மாறாக, மக்களுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தை ஒதுக்கி ஆர்ப்பாட்டத்தை நடத்த நிர்ப்பந்திக்கின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை. சென்னை மாநகர காவல்துறையினரின் இந்த போக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது.
ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்தை, அமைதியான முறையில் நடத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எந்த இடையூறுமின்றி செயல்படுத்த வேண்டிய துணை ஆணையர், இதற்கு மாறாக, அனாவசியமாக அதட்டும் தொனியிலும், ஒருமையில் பேசியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் வகையிலும், மனித உரிமைகளை பறிக்கும் வகையிலும் திட்டமிட்டு சீர்குலைவு நடவடிக்கையில் நடந்து கொண்டுள்ளதானது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையே ஆகும்; சட்ட விதிகளுக்கும் புறம்பானதாகும். இப்படிப்பட்ட ஒருவர் மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எப்படி முறையாக கையாள்வார், சாதாரண பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்கின்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
எனவே, அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் எங்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு அதனை சீர்குலைக்கும் நோக்கோடும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ரகுபதி அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
இங்ஙனம்/ஒப்பம்
கே பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்