ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகச் சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்குள் நுழைவதும், இறுதிப் போட்டிக்கு தகுதியாவதும் மிகப்பெரிய சவாலான விஷயங்கள். மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவராக இருந்தாலும் இந்த சவால்களை முறியடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்திய நாடே அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தகுதி இழப்பு செய்தது பேரிடியாய் இறங்கியது. தற்போது போட்டிகளிலிருந்து விலகுவதாக வேதனையுடன் அறிவித்திருக்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பல மாதங்களாக மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றைய தலைவராகவும், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராடி வந்தனர். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அதை முற்றிலும் நிராகரித்ததோடு பிரிஜ்பூஷன் சரண்சிங்கிற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் தாங்கள் பெற்ற பதக்கங்களை எல்லாம் கங்கை நதியில் வீசிவிடப் போவதாக வீராங்கனைகள் அறிவித்தார்கள். இந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை பாத்திரம் வகித்தவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது. வீராங்கனைகளை ஒடுக்குவதில் குறியாக இருந்த ஒன்றிய அரசாங்கம் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக சுட்டுவிரலைக் கூட அசைக்கவில்லை என்பது நாடறிந்ததே.
இந்நிலையில்தான் தகுதி நீக்கம் நடந்திருப்பதும், அதைத்தொடர்ந்த ஒன்றிய அரசாங்கத்தின் மௌனமும் தகுதி நீக்கம் சதியாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை வலுவாக எழுப்பியுள்ளது. 100 கிராம் எடை குறைப்பு என்பது சாத்தியமற்றதல்ல என்று நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள். போட்டி துவங்க இருந்த நேரத்தில் எடை பிரச்சனையை கிளப்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், இதனை எதிர்த்து முறையாக அவகாசம் கேட்க பயிற்சியாளர் தவறியது போன்ற காரணங்களால் இந்திய நாடு அடைய இருந்த பெருமையும், வினேஷ் போகத் வரலாற்று சாதனையும் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழும்பியுள்ளன. வினேஷ் போகத் தகுதி இழப்பு செய்யப்பட்டதையொட்டி கருத்து தெரிவித்துள்ள விளையாட்டு வீரர்களும், அரசியல் கட்சிகளும் தகுதி நீக்கத்திற்கு பின்னே சதி இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். எழும்பியுள்ள கொந்தளிப்பான சூழ்நிலைக்கு ஒன்றிய பாஜக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
எனவே, இப்பிரச்சனை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையீடுகளைச் செய்து வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க போதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டு வீரர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள ஐயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
தகுதி இழப்பு செய்யப்பட்டாலும் வினேஷ் போகத் உண்மையான வீராங்கனை என்ற பெருமைக்குரியவராவர். அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்