மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்து முறியடிக்க முன்வரவேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையையும், கூட்டாட்சி அமைப்பு முறையையும் அரித்து வீழ்த்திடும்.
மக்களவைக்கான தேர்தலுடன் நடத்த வேண்டும் என்பதற்காக சில சட்டமன்றங்களின் ஆயுளைக் குறைக்கும் விதத்தில் இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன. மேலும், ஒரு மாநில அரசு கவிழ்ந்து, சட்ட மன்றம் கலைக்கப்படும் பட்சத்தில், இடைக்காலத் தேர்தல் நடத்தப்படும்; இந்த தேர்தல் சட்டமன்றத்தின் மீத முள்ள காலத்திற்கு மட்டுமேயாகும் என்பவை அனைத்தும் அரசியல மைப்புச் சட்டத்தின்படி ஐந்தாண்டு காலத்திற்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை மீறுகின்றன.
இடைக்காலத் தேர்தலால் அடிபடும் நோக்கம்
மேலும் எஞ்சியிருக்கும் காலத்திற்கு மட்டும் பேரவைக்கு இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற பரிந்துரை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டு வரப்படுவதன் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது. இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர், குறுகிய காலத்திலேயே மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.
அனைத்துப் பஞ்சாயத்து களுக்கும், நகர்மன்ற அமைப்பு களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறி யிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நயவஞ்சகமான முறையில் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலே யாகும். உள்ளாட்சி அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரங்களைக்கூட ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் அதீத நடவடிக்கையாகும் இது.
மேலும் பறிபோகும் மாநில உரிமைகள்!
உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடத்துவது என்பது அந்தந்த மாநில அரசுகளின் நோக்கத்திற்கு உட்பட்டவையாகும். அதனையும் கூட ஒன்றிய அரசாங்கம் பறித்துக்கொள்ளும் விதத்தில் இந்த முடிவினை எடுத்திருக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாறுபட்ட நிலை மைகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தோமானால் இது ஓர் அபத்தமான முடிவு என்பது தெரியவரும்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்னும் கருத்தாக்கம் ஆர்எஸ்எஸ் – பாஜக வகையறாக்களின் சிந்தனையில் உருவானது. இது ஒரே தலைவரின் கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசையே உருவாக்க விரும்புகிறது.
இந்த நோக்கத்திற்காக அரசியலமைப்பைத் திருத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக எதிர்க்கும்.
ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கக் கூடிய ஒவ்வொரு கட்சியும், ஒன்றுபட்டு நின்று, இந்தக் கேடுகெட்ட நடவடிக்கையை எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.
சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறைகூவல்