ஆவணங்கள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி சாவு! உயர்நீதிமன்ற கண்காணிப்பில் மறு உடற்கூறாய்வு செய்து நீதி விசாரணை நடத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Kaavalthurai

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பழுர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து என்பவர் மகன் பட்டியல் சமூகத்தை சேர்ந்த திராவிடமணி (வயது 40) என்ற கூலித் தொழிலாளியை 26.9.2024 அன்று திருச்சி ஜீயபுரம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அதன்பின் அடுத்தநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  28ந் தேதி மாலை  திராவிட மணிக்கு வலிப்பு வந்து விட்டதாகவும், அவர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்  கூறியதன் பேரில் உறவினர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியும் பார்க்க முடியாமல் இருந்துள்ளனர். இறுதியில் சடலமாக பிணவறையில் கிடத்தப்பட்டுள்ளார். உறவினர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு அவரது உடலை பார்த்த போது  உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல்துறையினர் உறவினர்களிடம் முறையாக தகவல் ஏதும் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனையும் முடித்துள்ளனர். இந்நிலையில் உடலை வாங்க மறுத்து திராவிடமணி இறப்பிற்கு நியாயம் கேட்டும், உரிய மேல்மட்ட விசாரனை நடத்தக் கோரியும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.   உடல் முழுவதும் கடுமையான காயங்கள் உள்ள பின்னணியில் போலீசார் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்துள்ளது பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது.

தனது கணவரின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டியும்,  நீதிமன்ற கண்காணிப்பில் மறு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் திராவிட மணியின் மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் மேற்கண்ட திராவிடமணி குடும்பத்தினரை உடலை வாங்கச் சொல்லி நிர்பந்தம் செய்வது, மிரட்டுவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   திராவிடமணியின் இறப்பு குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது ஆதாரங்களை, தடயங்களை அழித்து விடும் நோக்கத்தில் தவறு செய்த காவல்துறை, சிறைத்துறையினரை காப்பாற்றும் நோக்கத்தில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவது சட்டத்திற்கு புறம்பானதாகும். இச்செயலை மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, பட்டியலின வகுப்பைச் சார்ந்த திராவிடமணியின் இறப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மறு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும், உள்ளூர் காவல்துறை தலையீடுகள், குறுக்கீடுகள் இன்றி இவ்வழக்கின் விசாரணையை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தி தவறிழைத்தவர்கள் மீது கொலை வழக்கும்,  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய திருச்சி,  ஜீயபுரம் காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள் அனைவரையும் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்வதோடு,  திராவிடமணி குடும்பத்தினரை மிரட்டி உடலை வாங்க நிர்பந்திக்கும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அக்குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்