தீர்மானங்கள்மாநிலக் குழு

கூட்டுறவு தேர்தலை உடனடியாக நடத்திடுக!

Thiirmanam 22

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்   2024 டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பழனியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு..

தீர்மானம் 2 :

கூட்டுறவு தேர்தலை உடனடியாக நடத்திடுக!

கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக் குழுவின் பதவி காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் செயலாட்சியர்கள் கட்டுப்பாட்டில்  நடைபெற்று வருகிறது.  கூட்டுறவு சங்க தேர்தல்  தொடர்பாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும், திருத்திய வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர். அதில் அடுத்த ஆறு மாதத்திற்குள் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்க வேண்டும், வாக்களிக்க தற்போது உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளுடன் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமை உள்ள ‘அ’ வகுப்பு உறுப்பினராக மாற்றி அமைத்திட தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு பொது பேரவை கூட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்ட ‘ஆ’ வகுப்பு உறுப்பினர்களை ‘அ’ வகுப்பு உறுப்பினராக மாற்றுவதற்கான தீர்மானம் மற்றும் இறந்த உறுப்பினர்களை நீக்குதல், புதிய உறுப்பினர் சேர்த்தல் உள்ளிட்டவைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.      

தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் சுமார் 2 கோடியே 23 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தற்போது 44 லட்சம் பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 1 கோடியே 79 லட்சம் உறுப்பினர்களில் 1 கோடியே 46 லட்சம் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகுதியாக உள்ள 33 லட்சம் உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டையை வழங்கினால் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் 22,250 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2013 மற்றும் 2018ல் நடைபெற்ற தேர்தல் அராஜகங்களை அளவிட முடியாது. எனவே, எதிர்வரும் கூட்டுறவு தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்ப்பதற்கு உரிய கால அவகாசம் அளிப்பது, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் என்பதற்கான கால அவகாசம் அளிப்பது, வாக்காளர் தகுதிகள் / வேட்பாளர் தகுதிகள் அனைவரும் அறியும் வகையில்  அறிவிப்பு செய்வது, வாக்களிக்க போதுமான பாதுகாப்பு அளிப்பது, கூட்டுறவு தேர்தல் ஆணையம் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவைகளை அரசு உறுதி செய்திட வேண்டும். வேட்பு மனு தாக்கல்,  வேட்பு மனு பரிசீலனை, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என அனைத்திலும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி கூட்டுறவு தேர்தலை நடத்திட  தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கே.பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர்