ஃபெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும் சேதமும், கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஃபெஞ்சால் புயலும், வெள்ளமும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அதேபோல விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் கரும்பு, வேர்க்கடலை, அறுவடைக்கு தயாராக உள்ள நெல் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. கோழிப்பண்ணைகளில் வெள்ள நீர் சூழந்துள்ளதால் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன. மரக்காணம் பகுதியில் 7000 ஏக்கர் உப்பளம் நீரில் மூழ்கியுள்ளதால் உற்பத்தி செய்து வைத்திருந்த உப்பு கரைந்து பெருமளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதீதமான மழைப்பொழிவால் நூற்றுக்கணக்கான ஏரிகள் மற்றும் ஆறுகளின் மதகுகள், கரைகள் உடைந்து சாலைகளிலும், ஆயிரக்கணக்கான வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பெருமளவிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. குடியிருப்புகளை வெள்ள நீர் சூழந்துள்ளதால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். திருவண்ணாமலை நகரத்தில் வ.உ.சி நகர் எனும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்துள்ளதோடு, நிலச்சரிவில் மக்கள் சிக்கியுள்ளனர். இன்னும் பல பகுதிகளிலும் மழை, வெள்ளதால் பெருமளவிலான இழப்புகளும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நிர்க்கதியாக நிற்கும் பொதுமக்களுக்கு உடனடியாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
பயிர்ச்சேதம், பொருட்சேதம் உள்ளிட்ட இழப்புகளுக்கான நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெள்ளத்தால் புயலால் சேதமடைந்துள்ள அணைகள், சாலைகள், பாலங்கள், மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும்,
புயல், வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து ஆய்வை மேற்கொள்வதோடு, பயிர் இழப்பு மற்றும் பொருட்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான உரிய இழப்பீட்டை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்க வேண்டுமெனவும்,
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் நோய்த் தொற்றை தடுப்பதற்கு உரிய மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், ஒன்றிய அரசு வெள்ளம் பாதித்த மாவட்டங்களை பார்வையிட அதிகாரிகள் குழுவினை அனுப்பி பாதிப்புகளை ஆய்வு செய்து தமிழக அரசு கோரும் நிதியை உடனடியாக அளித்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்