கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான தண்ணீர் பயன்படுத்தப்படாமல் கடலில் சென்று கலக்கும் நிலை நீடித்து வந்தது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள லோயர் அணைக்கட்டுக்கு கீழே சுமார் 120 கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீரை தேக்குவதற்கான எந்த அணையும் கட்டப்படாமல் பல நூற்றாண்டுகளாக தண்ணீர் வீணாகி வந்தது. இந்த நிலையில், சிதம்பரம் காட்டுமன்னார்குடி வட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்களை சார்ந்த ஆதனூர் குமாரமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையில் கதவணை கட்டி தண்ணீரை தேக்கினால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குராசன் வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் மயிலாடுதுறை தெற்குராஜன் வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்து தர முடியும் என்ற அடிப்படையில் இந்த அணையை கட்டித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற பல அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தன.
இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றப் பேரவையில் மேற்கண்ட அணையைக் கட்டித் தர வேண்டுமென தொடர்ந்து நான் கோரிக்கை எழுப்பிய அடிப்படையில் அப்போதைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களிடம் விவரமான மனுக்களை கொடுத்தும் வற்புறுத்தினேன். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்து அறிக்கையினை கேட்டுப்பெற்று சட்டமன்றத்தில் 400 கோடி ரூபாயில் இந்த அணை கட்டி தரப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன் பிறகு அந்த அணை கட்டுவதற்கு பல காரணங்களால் நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னணியில் அணை முழுமையாக கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
அணைக்குள்ளே பட்டா நிலம் வைத்திருக்கிற விவசாயிகள் சில பேருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாத காரணத்தால் அதை செயல்படுத்தப்படுவது தாமதமாகி வந்துள்ள சூழ்நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்றக்குழு தலைவர் தோழர் நாகை மாலி அவர்கள் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த அனை பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்டு விட்டது, இன்னும் சிறுபணிகள் பாக்கி இருக்கிறது, இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்கு முன்னாலேயே அந்த அணை திறந்து செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மாண்புமிகு அமைச்சருடைய அறிவிப்புக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இப்பகுதி விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு பேருதவியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.