31.10.2025
பெறுநர்
மாண்புமிகு பினராயி விஜயன்,
முதலமைச்சர் – கேரள அரசு,
திருவனந்தபுரம்.
அன்பான தோழரே, வணக்கம்.
2025 நவம்பர் 1ஆம் தேதி, கேரளா, இந்தியாவின் முதல் கடும் வறுமை அற்ற மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருப்பது, சமூக நீதிக் களத்தில் ஒரு மகத்தான மைல்கல் ஆகும்!
இந்த வரலாற்றுச் சாதனைக்காக மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சாரப் பாராட்டுகிறது.
கேரளாவின் இந்தச் சாதனை வெறும் புள்ளிவிவர வெற்றியல்ல; இது மனித மாண்புக்கான புரட்சி.
விஞ்ஞானபூர்வமான கணக்கெடுப்பின் மூலம் 64,006 கடும் ஏழைக் குடும்பங்களைத் துல்லியமாக அடையாளம் கண்டது;
ஒரே அளவு எல்லோரையும் திருப்திப்படுத்தாது என்ற அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட நுண் திட்டங்கள் (Micro-Plans) உருவாக்கப்பட்டது, எல்டிஎப் அரசின் மக்கள்நல அக்கறையைக் காட்டுகிறது.
உணவு, சுகாதாரம், வீடு, வாழ்வாதாரம் ஆகிய நான்கு தூண்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த தலையீடுகள் மூலம், வறுமையின் பன்முகத் தன்மைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த வெற்றி, 1957 நிலச்சீர்திருத்தம் முதல் பரவலாக்கப்பட்ட ஜனநாயகம் வரையிலான, இடதுசாரிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பல்லாண்டு கால சமூக மாற்றத்தின் உச்சகட்டமாகும். கடும் வறுமை என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல; மாறாக, அரசியல் உறுதிப்பாட்டால் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு சமூக அவலம் என்பதை கேரளா நிரூபித்துள்ளது.
கேரள மாநிலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் ஒரு புதிய சோசலிச முன்மாதிரியை நிறுவியுள்ளது. கேரள மக்கள் மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு மார்க்சிஸ்ட் க்ம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(பெ, சண்முகம்)
மாநில செயலாளர்







