பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு.
ஆர்பிஐ வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறுவதா?
ஐடிபிஐ (IDBI) வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த ‘ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்’ (Fairfax Financial Holdings) நிறுவனத்திற்குத் தாரை வார்த்திட ஒன்றிய அமைச்சரவை எடுத்துள்ள முடிவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்திய வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 சதவீதத்திற்கு மேல் வாக்குரிமை கொண்டிருக்கக்கூடாது என்றுஇந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள வழிகாட்டுதல்களை, ஒன்றிய அமைச்சரவை முடிவு அப்பட்டமாக மீறியிருக்கிறது.
நட்டம் பொதுத்துறைக்கு; லாபம் தனியாருக்கா?
ஐடிபிஐ வங்கி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வந்த நிலையில்- அதன் 51 சதவீதப் பங்குகளை, ஒன்றிய அரசின்கோரிக்கையின் பேரில் எல்ஐசி (LIC) நிறுவனம் வாங்கியது. இதன் பிறகு, ஐடிபிஐ லாபம் ஈட்டும் நிலைக்குத் திரும்பியுள்ளது.இந்நிலையில், சந்தேகத்திற்குரிய வகையில், ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக, ஐடிபிஐ வங்கியின் பங்குகள் முந்தைய மதிப்பீட்டை விடக்குறைவான விலையில் தாரை வார்க்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே ‘கத்தோலிக் சிரியன் வங்கி’யின் (Catholic Syrian Bank) 40 சதவீத பங்குகளையும், கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் கைப்பற்றி வைத்துள்ளது. ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த நிறுவனத்திற்கும், அதன் தணிக்கையாளர்களுக்கும், கடந்தகாலத்தில் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 வங்கிகளையும் தனியார்மயமாக்கத் திட்டம்
ஐடிபிஐ வங்கியை மட்டுமன்றி, ‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’ போன்று லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க நிதி ஆயோக் (Niti Aayog) பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தனியார்மயமாக்கல் என்பது சமூக நலன் சார்ந்த கடன் வழங்குதல் மற்றும்சிறு வைப்புதாரர்களின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் சூழலில், சாமானிய மக்களுக்கு வங்கிச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதிலும், அனைவருக்கும் கடன் வசதி கிடைப்பதை உறுதி செய்வதிலும் பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய பொறுப்பைப் பெற்றிருக்கின்றன.
எனவே, பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைக் கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்துகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > அரசியல் தமைமைக்குழு > வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே!ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு!
வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே!ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு!
posted on







