இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (11.01.23) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 4:
“எங்கள் எய்ம்ஸ் எங்கே”? 24.01.2023 மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதன் அடையாளமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு எந்தவித நியாயமும் இன்று வரை வழங்காமல் இருக்கிறது. 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் இன்று வரை துவக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசினுடைய அக்கறையின்மையும், மாற்றாந்தாய் மனப்போக்கே அடிப்படை காரணமாகும்.
எனவே, மதுரை எய்ம்ஸ் பணிகளை உடனடியாக துவக்கக் கோரி வரும் 24.01.2023 காலை 10 மணிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மதுரையில் தென்மாவட்டங்களைத் திரட்டி “எங்கள் எய்ம்ஸ் எங்கே” என்ற முழக்கத்தோடு “கைகளில் செங்கல் ஏந்தி” பெருந்திரள் போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய அரசினை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு தர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.