இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (11.01.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 5:
சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க கோவையில் மாநில மாநாடு
ஒன்றிய அரசின் நவீன தாராளமய கொள்கைகளால் தமிழகத்திலும் தொழில் நெருக்கடி தீவிரமாகியுள்ளது. சிறு-குறு நடுத்தர தொழில்கள் ஜி.எஸ்.டி. வரி உயர்வு, மூலப் பொருட்களின் விலையேற்றம், நூல்விலை உயர்வு, கடன் சுமை மற்றும் கடன் பெறுவதில் சிக்கல்கள், மின் கட்டண உயர்வு என பல தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. இதனால் கணிசமான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை பாதிப்பதுடன் வேலையின்மையையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி தமிழக பொருளாதாரத்தை பாதித்துள்ளது. ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து போனதால் நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இந்த தொழில்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நிலைமையை மோசமாக்கிடும் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. மாநில அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இந்நிலையில் சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க தமிழ்நாடு மக்கள் ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும். தொழில் பாதுகாப்பு, சிறு-குறு நடுத்தர தொழில்களை நம்பியுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தொழில் பாதுகாப்பு மாநில சிறப்பு மாநாடு கோயம்புத்தூரில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதிலிமிருந்தும், சிறு-குறு நடுத்தர தொழில் முனைவோரும், உழைக்கும் மக்களும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்பார்கள்.