ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் சுமார் 50 ஆண்டு காலமாக 13 அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டுள்ளதை மீண்டும் அதே இடத்தில் நடத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் இத்துடன் கீழே தரப்பட்டுள்ளது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
பொருள்:- ஈரோடு மாவட்டம் – சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தையில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 13 மாட்டிறைச்சி கடைகள் அகற்றம் – மாண்புமிகு முதலமைச்சர் தலையிட்டு மீண்டும் கடை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளனர். திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் 22.11.2022 அன்று புல்டோசர் கொண்டு அனைத்து கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள் நகராட்சி நிர்வாகத்தை பலமுறை அணுகி கடை நடத்த அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போதும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
சந்தைக்கு அருகில் மற்ற இறைச்சி கடைகள் எல்லாம் செயல்பட்டு வருகிறது. ஆனால், மாட்டிறைச்சிக் கடை மட்டும் நடத்தக்கூடாது என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்த 13 குடும்பங்களின் ஒரே வாழ்வாதாரம் மாட்டிறைச்சி விற்பனை செய்வது தான். தற்போது நிரந்தரமான கடை இல்லாததால் பெரும் பாதிப்புக்கு இக்குடும்பங்கள் ஆளாகியுள்ளன. 26 ஏக்கர் பரப்பளவு உள்ள சந்தையில் ஏதோ ஒரு பக்கம் மாட்டிறைச்சி கடை நடத்துவதால் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும், பொருத்தமான வேறொரு இடத்தில் சுகாதாரமான முறையில் கடைகளை நகராட்சி நிர்வாகமே அமைத்து கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக முதன்மை செயலாளர் (நகராட்சி நிர்வாகம்) முதற்கொண்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு மனுக்கள் அளித்தும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இப்பிரச்சனையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மீண்டும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுகிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
தங்களன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்