மற்றவை

மனித உரிமை மீறல்: காவல்துறை அதிகாரி மீது குற்றவழக்கு பதிவு செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல் Copy

தீர்மானம் 3:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞர்களின் பல்லை பிடுங்கிய சம்பவம் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளா, இல்லையா என்பதைத் தாண்டி காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டு தண்டனை வழங்கும் செயலானது கண்டனத்திற்குரியது.

            தமிழ்நாடு அரசு உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் இந்த விசாரணை தயவுதாட்சண்யமின்றியும், உண்மையைக் கொண்டு வரும் வகையிலும் நடக்க வேண்டுமென்றால் இப்போது துணை ஆட்சியர் விசாரிப்பார் என்பதை மாற்றி, இதைவிட உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிப்பது அவசியம். மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் திட்டமிட்டே இதை ஒரு நடைமுறையாகவும், ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் சட்டம் தனக்கு பொருந்தாது என்கிற ஆணவத்திலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருப்பதாக தெரிகிறது.

            எனவே, அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும். அதிகாரம் கையிலிருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதும் அதிகாரிகளுக்கு இதுவே ஒரு எச்சரிக்கையாகவும், எதிர்காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் உதவும். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, அவர்களுக்கு மருத்துவத்திற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் நோவுக்கும் ஆளாகியுள்ள இவர்களுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும். இந்த நடவடிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதன் மூலம்  சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.